மோசமடையும் நிலைமை... மீண்டும் இராணுவத்தை அனுப்பும் சுவிஸ்!
கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிக்க பிராந்திய அதிகாரிகளுக்கு உதவ 2,500 இராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் சிறிய அண்டை நாடான Liechtenstein-ல் கடந்த ஆண்டு தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து 1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் மற்றும் நோயால் கிட்டத்தட்ட 11,300 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மோசமான சூழ்நிலையிலும் பொருளாதார சரிவிலிருந்து மீள அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தி கடைகளை திறந்து வைத்ததால் தற்போது நாட்டில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து சில மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், முகக் கவசம் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான விதிகளை சுவிஸ் கடுமையாக்கியது.
கொரோனா நோயாளிகளைப் பராமரிக்க அல்லது கொண்டு செல்லவும், தடுப்பூசிகளை விநியோகிக்கவும் உள்ளூர் பாதுகாப்பு, தீயணைப்புத் துறை மற்றும் தனியார் துறைகள் போதுமானதாக இல்லாவிட்டால் பிராந்தியங்கள் இராணுவத்தின உதவியை கோர சுவிஸ் அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற உதவிக்கு இராணுவம் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமாறு பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
தற்போது சுவிட்சர்லாந்தில் 79 சதவித மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 சதவிதம் மட்டுமே.
அதேசமயம், சுவிஸ் மக்கள் தொகையில் 66 சதவித பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.