ட்ராவல் ஏஜன்சியின் தவறால் ரத்தான சுவிஸ் பயணம்: இந்திய தம்பதிக்கு இழப்பீடு
Switzerland anniversary trip cancelled, travel agency to pay Rs 4 lakh: ட்ராவல் ஏஜன்சியின் தவறால் இந்திய தம்பதியின் சுவிஸ் பயணம் ரத்தான வழக்கில், அவர்களுக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கள் 25ஆவது திருமண நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக சுவிட்சர்லாந்து செல்ல பல மாதங்களாக திட்டமிட்டு வந்துள்ளனர் கொல்கொத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர்.
ட்ராவல் ஏஜன்சியின் தவறு
இந்நிலையில், ட்ராவல் ஏஜன்சியிடம் அவர்கள் ஒப்படைத்திருந்த பாஸ்போர்ட் சேதமாகியுள்ளது.
பாஸ்போர்ட் சேதமானதால் விசா கிடைக்காமல் போக, தட்கால் முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் அந்த தம்பதியர்.
ஆனால், அவர்கள் திட்டமிட்ட நேரத்தில் பாஸ்போர்ட் கையில் வந்து சேராது என தெரியவந்துள்ளது.
ஆக, பல மாதங்களாக திட்டமிட்ட சுவிஸ் பயணம் ரத்தாக, தாங்கள் செலுத்திய 3,02,971 ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு ட்ராவல் ஏஜன்சியிடம் கேட்டுள்ளார்கள் அவர்கள்.

ஆனால், அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்கமுடியாது என்று கூறிய ஏஜன்சி, கூடுதலாக பணம் கேட்டதுடன், பாஸ்போர்ட் சேதமானதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளது.
இந்த விடயம் வருடக்கணக்காக இழுத்துக்கொண்டே செல்ல, அந்த தம்பதியர் நுகர்வோர் ஆணையத்தை அணுகியுள்ளனர்.
வழக்கை விசாரித்த ஆணையம், அந்த தம்பதியர் தங்கள் 25ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக பல மாதங்களாக திட்டமிட்டிருந்தனர் என்றும், அந்த விடயம் அவர்கள் வாழ்வில் மீண்டும் வரப்போவதில்லை என்றும் கூறியுள்ளது.
ஆகவே, அந்த தம்பதியர் செலுத்திய 3,02,971 ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதுடன், கூடுதலாக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக 25,000 ரூபாயும் 45 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என்றும் ட்ராவல் ஏஜன்சிக்கு உத்தரவிட்டுள்ளது.