அனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்... நீதிமன்றம் உத்தரவு
ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடுமாறு சுவிஸ் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ள சுவிஸ் பெடரல் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டு வரி மற்றும் ஆய்வுப் பிரிவு, 2011 ஏப்ரல் முதல் 2018 செப்டம்பர் வரையிலான கணக்கு விவரங்களை அளிக்குமாறு சுவிட்சர்லாந்திடம் கேட்டுக்கொண்ட நிலையில், அந்த விவரங்களை அவர்களிடம் கையளிக்குமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பின் நகல் ஒன்று உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
அந்த தீர்ப்பில், சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த விவரத்தை வெளியிடாமல் தடுக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து நீதிமன்றம் அந்த தகவல்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது.
இதுவரை சுவிஸ் வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்களை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்த நிலையில், இப்போது வெளியாகியுள்ள இந்த நீதிமன்றத்தின் உத்தரவு ஒரு நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது. இதனால், இனி சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் குறித்த தகவல்களை அரசுகள் பெறமுடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் சட்டப்படி, இதுபோன்ற தகவல்களைப் பெறவேண்டுமானால், அதற்கான ஒரு சிறப்புக் கோரிக்கை சுவிஸ் அரசாங்கத்துக்கு விடுக்கப்படவேண்டும், அதன்பின், தேவையான தகவல்களை சுவிஸ் வங்கிகள் அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து அரசு முடிவு செய்யும். கடந்த சில ஆண்டுகளாகவே, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், தங்கள் குடிமக்கள் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார்களா என்பது தொடர்பாக தெரிவிக்குமாறு சுவிட்சர்லாந்தை நெருக்கி வருகிறார்கள்.
அம்பானி குடும்பத்தினர் விவகாரத்தைப் பொருத்தவரையில், இப்போது இந்திய
அதிகாரிகள் கோரும் விவரங்களை சுவிஸ் வங்கிகள் கொடுக்குமானால், அம்பானி மீதான
ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலுமா இல்லையா என்பது குறித்த தெளிவான
பிம்பம் அவர்களுக்குக் கிடைக்கும் என்பதால், இந்த தீர்ப்பு முக்கியத்துவம்
வாய்ந்ததாக கருதப்படுகிறது.