போருக்கு மத்தியில் உக்ரைனில் உணவகம் திறக்க திட்டமிட்டுள்ள சுவிஸ் நாட்டவர்
The Swiss businessman opening a restaurant in war-torn Kyiv: சுவிஸ் தொழிலதிபர் ஒருவர், போருக்கு மத்தியில் உக்ரைன் தலைநகரில் உணவகம் ஒன்றைத் திறக்க திட்டமிட்டுவருகிறார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில், தினமும் ரஷ்ய தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன்கள் ஒலித்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், போருக்கு மத்தியில் அங்கு உணவகம் ஒன்றைத் திறப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் சுவிஸ் தொழிலதிபர் ஒருவர்.
போர் நேரத்தில் உணவகமா?
போர் நேரத்தில் உணவகம் திறப்பதா என்றால், போர் நேரத்தில் ஏன் உணவகம் திறக்கக்கூடாது என்று கேட்கிறார் செபாஸ்டியன் (Sebastian Lützen).

சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் பிறந்து, சூரிக் நகரில் படித்த செபாஸ்டியன், தன் காதலி கீவ்வில் வசித்துவந்ததால், 2017ஆம் ஆண்டு முதல், கீவ்வில் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கீவ்வுக்கே குடிபெயர்ந்தும் விட்டார் செபாஸ்டியன். ஆனால், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
அதேபோல, போர் துவங்கியபின்னரும், போர் சில மாதங்களில் முடிந்துவிடும் என்றே எண்ணியுள்ளார் செபாஸ்டியன். ஆனால், போர் இன்னமும் முடிந்தபாடில்லை.
இந்நிலையில்தான், கீவ்வில் சுவிஸ் உணவகம் ஒன்றை திறக்க முடிவு செய்துள்ளார் செபாஸ்டியன்!
போருக்கு முன், கீவ் நகரில் பல கடைகள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.
ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. என்றாலும், அன்றாட வாழ்வு தொடரத்தான் செய்கிறது.

ஆகவேதான் தான் இப்போது உணவகம் திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் செபாஸ்டியன்.
போர் நேரத்தில் உணவகம் திறப்பதா என்றால், போர் நேரத்தில் ஏன் உணவகம் திறக்கக்கூடாது என்று கேட்கும் செபாஸ்டியன், அன்றாட வாழ்வும் பொருளாதாரமும் போருக்கு மத்தியிலும் தொடரத்தான் செய்கின்றன. அப்படியானால், ஏன் போர் நேரத்தில் உணவகம் திறக்கக்கூடாது என்கிறார்.
உணவகம் திறக்க சரியான இடம் தேடிக்கொண்டிருக்கும் செபாஸ்டியன், முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் இடங்களைத் தவிர்க்க விரும்புகிறார்.
ஏனென்றால், அவை எளிதில் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என்பதால் அந்த இடங்களைத் தவிர்க்கும் செபாஸ்டியன், தாக்குதல் நிகழ்ந்தால், மக்கள் பாதுகாப்பாக தங்கும் ஓரிடம், தரைத்தளத்துக்குக் கீழ் கார் பார்க்கிங் அல்லது மெட்ரோ ரயில் நிலையம் இருந்தால் நல்லது என்னும் விடயங்களை மனதில் வைத்துக்கொண்டு உணவகத்துக்கான இடத்தைத் தேடி வருவதாக தெரிவிக்கிறார்.
இன்னொரு முக்கிய விடயம், இது உணவில்லாத மக்களுக்கு உதவுவதற்கான திட்டம் அல்ல என்பதையும் உறுதிபடுத்தும் செபாஸ்டியன், என்றாலும், அது பலருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதாக அமையும் என்றும் கூறுகிறார்.