உக்ரைனைப் போல தாக்குதலுக்குள்ளானால் சுவிட்சர்லாந்தால் சமாளிக்க முடியாது: நிபுணர் தெரிவிக்கும் திடுக் தகவல்
உலகமே உக்ரைன் போரால் கவலையிலாழ்ந்துள்ள நிலையில், உக்ரைனைப் போல தாக்குதலுக்குள்ளானால் சுவிட்சர்லாந்தால் சில நாட்கள் கூட சமாளிக்க முடியாது என்று கூறி, வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் சுவிஸ் இராணுவ நிபுணர் ஒருவர்.
இராணுவ நிபுணரான பேராசிரியர் Albert Stahel, உக்ரைனைப் போல தாக்குதலுக்குள்ளானால், சுவிட்சர்லாந்தால் சில நாட்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார். சுவிஸ் இராணுவம் வைத்துள்ள பழைய மொடல் கருவிகளைக் கொண்டு போரிடுவது கடினம் என்கிறார் அவர்.
சுவிட்சர்லாந்தின் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் 1963ஆம் ஆண்டு, வியட்நாம் போரின்போது வாங்கப்பட்டவை. சுவிஸ் துப்பாக்கிகள் 1960, 70களைச் சேர்ந்தவை. சுவிட்சர்லாந்தின் போர் விமானங்களும் பழையவைதான். இதை சுவிஸ் பாதுகாப்புத்துறையே ஒப்புக்கொள்ளும். அத்துடன், சுவிஸ் இராணுவத்தில், தாக்குதல் நடத்தும் ஹெலிகொப்டர்களும் கிடையாது.
ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த சுவிஸ் இராணுவத் தலைவரான Thomas Süssli, சுவிட்சர்லாந்தின் மீது தாகுதல் நடத்தப்பட்டால், பேராசிரியர் Albert சொல்வதைப்போலல்லாமல், பல வாரங்களுக்கு அதன் இராணுவத்தால் தாக்குதலை எதிர்க்க முடியும் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கமோ, சுவிஸ் இராணுவ அலுவலர் சமூகத்தின் தலைவரான கர்னல் Dominik Knill என்பவர், சுவிஸ் இராணுவத்தில் உணவு மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கிறார். அவர் சுவிஸ் இராணுவத்தை மேம்படுத்த நிதி ஒதுக்குமாறு அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Global Firepower என்னும் இணையதளம், 142 நாடுகளின் இராணுவ வலிமை தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்தை 32ஆவது இடத்தில் வைத்துள்ளது. ஆனால், உக்ரைனோ 22ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.