சுவிட்சர்லாந்தை உலுக்கிய பெரும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய திருப்பம்: சிக்கிய ஐவர்
சுவிட்சர்லாந்தில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து, 20 மில்லியன் பிராங்குகள் மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் பணம் உளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு மாயமான கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2019ல் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஐவர் கும்பலை பிரான்சில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பல மாதங்களாக நீடித்த விசாரணையின் பின்னர், ஜெனீவாவுக்கு அருகிலுள்ள லியோன் மற்றும் அன்னேமாஸ் ஆகிய இடங்களில் பதுங்கியிருந்த ஐந்து பிரெஞ்சு பிரஜைகளை,
பிரெஞ்சு மற்றும் சுவிஸ் பொலிசார் ஒன்றிணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் இறுதியில் கைது செய்யப்பட்டதாக வாட் மண்டல பொலிசார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பிரான்சிலும் சுவிஸில் பொலிசார் தொடர்ந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
31 முதல் 42 வயதுடைய கும்பல் ஒன்று கடந்த 2019 டிசம்பர் 2ம் திகதி லொசேன் நகரின் வடக்கே டெய்லென்ஸில் சுவிஸ் போஸ்ட் வேன் ஒன்றை வழிமறித்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று சுமார் 7.40 மணியளவில் இரண்டு வாகனத்தில் வந்த அந்த கும்பல், சுவிஸ் போஸ்ட் வாகனத்தை நிறுத்தி, துப்பாக்கி முனையில் அதன் சாரதி உள்ளிட்டவர்களை வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் வெடிப்பொருட்களை பயன்படுத்தி, குறித்த வாகனத்தை திறந்து, அதில் இருந்து மொத்தம் CHF20 மில்லியன் மதிப்புள்ள பணம், கைக்கடிகாரங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
மட்டுமின்றி மூன்று வாகனங்களுக்கும் தீயிட்ட பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். கடந்த 2006 முதல் இதுபோன்ற 11 கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
பல சம்பவங்களில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறையும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.