விலைவாசி அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள இரண்டு சுவிஸ் நகரங்கள்
சமீபத்திய ஆய்வு ஒன்றில், விலைவாசி அதிகம் உள்ள 10 நகரங்கள் பட்டியலில், சுவிஸ் நகரங்கள் இரண்டு இடம்பிடித்துள்ளன.
Economist Intelligence Unit (EIU) என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதிலுமுள்ள 173 நகரங்களில், 200 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், 2021இல் அதிக விலைவாசி உள்ள 10 நகரங்களின் பட்டியலை உருவாக்கியது அந்த அமைப்பு.
அந்த பட்டியலில் சுவிஸ் நகரங்களான ஜெனீவா மற்றும் சூரிச் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
2021இல் அதிக விலைவாசி உள்ள 10 நகரங்களின் பட்டியலில், சூரிச் நகரம் நான்காவது இடத்தையும், ஜெனீவா, 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கடந்த முறை சூரிச் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, ஜெனீவா அதே ஏழாவது இடத்திலேயேதான் இருந்தது என்பதுதான்.
பொதுவாகச் சொன்னால், இந்த 173 நகரங்களிலுமே விலைவாசி 3.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு அதிக விலைவாசி காணப்படுவது இப்போதுதான்.
2020இல் இந்த நகரங்களில் விலைவாசி வீதம் 1.9 சதவிகிதமும், 2019இல் 2.8 சதவிகிதமும் உயர்ந்திருந்தது. 2021இல் அது 3.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பொருட்கள் கிடைப்பதில் பிரச்சினை, நாணய மாற்று வீதத்தில் மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையில் மாற்றங்கள் ஆகிய விடயங்கள் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. குறிப்பாக, பெட்ரோல் விலை சராசரியாக 21 சதவிகிதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துக் கட்டணம் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு அதிக விலைவாசி உள்ள 10 நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது டெல் அவிவ் (இஸ்ரேல்) நகரம். கடந்த முறையில் இருந்ததிலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி, முதல் இடத்தைப் பிடித்துள்ளது டெல் அவிவ்.
2021இல் விலைவாசி அதிகம் உள்ள 10 நகரங்கள் பட்டியல்
- டெல் அவிவ்
- பாரிஸ்
- சிங்கப்பூர்
- சூரிச்
- ஹொங்ஹொங்
- நியூயார்க்
- ஜெனீவா
- கோப்பன்ஹேகன்
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- ஓசாக்கா
இந்த ஆய்வு, 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 16ஆம் திகதிக்கும், செப்டம்பர் மாதம் 12ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.