இங்கே இருக்காதீர்கள்: டிக்கெட்டும் பணமும் கொடுத்து பிச்சைக்காரர்களை வெளியேறச் சொல்லும் சுவிஸ் நகரம்
பிச்சைக்காரர்களுக்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்து, கொஞ்சம் கைச்செலவுக்கு பணமும் கொடுத்து, எங்கேயாவது போய்விடுங்கள் என்று கூறியுள்ளது சுவிஸ் நகரம் ஒன்று.
மீண்டும் திரும்பி வரமாட்டோம் என உறுதியளித்தால், பிச்சைக்காரர்களுக்கு ஐரோப்பாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல டிக்கெட் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளது பேசல் நகரம்.
பேசல் நகர புலம்பெயர்தல் அலுவலகம், பிச்சைக்காரர்கள் தாங்கள் எந்த ஊருக்குச் செல்ல விரும்பினாலும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்புவதோடு, கைச்செலவுக்கு 20 சுவிஸ் ஃப்ராங்குகள் பணமும் கொடுத்து அனுப்புவது என முடிவு செய்துள்ளது.
ஆனால், ஒரு நிபந்தனை! அப்படி டிக்கெட் பெற விரும்புபவர்கள், இனி குறித்த காலகட்டத்துக்கு சுவிட்சர்லாந்துக்கு திரும்புவதில்லை என்று உறுதியளித்து, ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவேண்டும்.
ஒப்பந்தத்தை மீறி அவர்கள் மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு வந்து சிக்கினால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, 31 பேர் அவ்வாறு சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறுவதற்கு சம்மதித்துள்ளார்கள்.
அவர்களில் 14 பேர் ரொமேனியாவையும், 7 பேர் பெல்ஜியத்தையும், 7 பேர் ஜேர்மனியையும், 2 பேர் இத்தாலியையும், ஒருவர் பிரான்சையும் சேர்ந்தவர்கள் ஆவர்.