தாய்க்குத் தெரியாமல் சுவிட்சர்லாந்துக்குச் சென்ற பிரித்தானியர் எடுத்த முடிவு: மன்னிப்புக் கோரியுள்ள மருத்துவமனை
பிரித்தானியர் ஒருவர், தன் தாய்க்குத் தெரியாமல் சுவிட்சர்லாந்துக்குச் சென்று, மருத்துவர்கள் உதவியுடன் தன் வாழ்வை முடித்துக்கொண்ட விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது.
தாய்க்குத் தெரியாமல் சுவிட்சர்லாந்துக்குச் சென்ற பிரித்தானியர்
Credit: ITV News
லண்டனில் வாழ்ந்துவரும் ஜூடித் (Judith Hamilton, 82) என்னும் பெண்மணியின் மகனான ஹாமில்டன் (Alastair Hamilton, 47), கடந்த ஆண்டு, ஆகத்து மாதம், தன் தாயிடம், தான் பாரீஸுக்குச் செல்வதாகக் கூற, அவர் தன் மகனை விமான நிலையத்தில் சென்று வழியனுப்பியுள்ளார். விடைபெறும்போது, தாயை இறுகக் கட்டியணைத்துக்கொண்ட ஹாமில்டன், புன்னகையுடன், அம்மா, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், வாழ்வில் என்ன நடந்தாலும், எப்போதும் உங்களை நேசிப்பேன் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால், அந்த தாய்க்குத் தெரியாது, அது மகன் தனக்கு அளிக்கும் இறுதி பிரியாவிடை என்பது.
மகனைக் காணாமல் குழப்பமடைந்த தாய்
பாரீஸுக்குப் போவதாகக் கூறிச் சென்ற மகன் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த ஜூடித், அவர் மொபைலிலும் பதிலளிக்காததால், பொலிசில் புகாரளித்துள்ளார்.
பொலிசார் அவரைத் தேடிவந்த நிலையில், அவரது வங்கிக்கணக்கிலிருந்து Pegasos என்னும் அமைப்புக்கு 11,000 பவுண்டுகள் அனுப்பப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். Pegasos என்பது, சுவிட்சர்லாந்தில் Basel நகரிலுள்ள மருத்துவர்கள் உதவியுடன் வாழ்வை முடித்துக்கொள்ள உதவும் ஒரு அமைப்பாகும்!
Credit: ITV News
அதைத் தொடர்ந்து, ஹாமில்டனின் தாய் மற்றும் உறவினர்களுடன் சில ஊடகவியலாளர்களும் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல, ஹாமில்டன் Pegasos அமைப்பில் மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவரவே, குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
வேதியியல் ஆசிரியரான ஹாமில்டன், கடும் வயிற்றுவலியால் அவதியுற்று வந்துள்ளார். அவரது சிகிசைக்கு அவரது குடும்பத்தினர் உதவிவந்த நிலையிலும், உடல் மெலிந்து, மனவேதனை அனுபவித்து வந்ததால், தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது.
மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அமைப்பு
என்றாலும், தன் மகனுடைய உயிர் பிரியும்போது தன்னால் அவருடன் இருக்கமுடியவில்லையே என கண்ணீர் விட்டுள்ளார் ஜூடித்.
Credit: ITV News
இந்நிலையில், ஜூடித் மற்றும் ஹாமில்டனின் குடும்பத்தினரிடம் Pegasos அமைப்பு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இனி தங்கள் அமைப்பில் யாராவது உயிரை மாய்த்துக்கொள்ள வந்தால், அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதை கட்டாயமாக்கும் வகையில் தங்கள் அமைப்பின் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் Pegasos தெரிவித்துள்ளது.
Credit: ITV News
Credit: ITV News
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |