மதுபான விடுதிக்கு போகமுடியாதபடி பெரிய பெரிய கற்களை வைத்து தடுத்த சுவிஸ் பொலிசார்: பின்னணி
சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு உருவாகி வருகிறது.
கொரோனா சன்றிதழ்களை சரிபார்க்க உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளின் உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், மிகவும் புகழ் பெற்ற பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றின் முன், பொலிசார் பெரிய பெரிய காங்கிரீட் பாளங்களை அடுக்கிவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவிட்சர்லாந்தில், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குள் சென்று உணவு மற்றும் மதுபானம் அருந்துவதற்கு கொரோனா சான்றிதழ்கள் அவசியம் என்ற விதி சென்ற மாதம் அமுலுக்கு வந்தது.
பனிச்சறுக்குக்கு பெயர் பெற்ற Zermatt என்ற நகரிலுள்ள Walliserkanne என்ற உணவகத்தின் உரிமையாளர்கள், தொடர்ந்து கொரோனா சன்றிதழ்களை சரிபார்க்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே, அங்கு சென்ற பொலிசார், பெரிய பெரிய காங்கிரீட் பாளங்களை அந்த உணவு விடுதியின் வாசலுக்கு முன் அடுக்கி வைத்து வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல முடியாதபடி தடுத்திருக்கிறார்கள்.
ஆனால், அந்த உணவக உரிமையாளர்கள், அந்த பாளங்கள் மீதே மதுபான போத்தல்களை வைத்து விற்பனை செய்துள்ளார்கள். அத்துடன், உணவகத்தின் பின் வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்துள்ளார்கள்.
அதைக் குறித்து விசாரிக்கச் சென்ற பொலிசாரை உணவக உரிமையாளர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுப்பேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து உணவக உரிமையாளர்களான மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.