அதிக அச்சுறுத்தல்... சுவிஸில் தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைக்கப்பட்ட முக்கிய நாடு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுவிஸ் நிர்வாகம் அதிக ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்துள்ளது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து சுவிஸ் திரும்பும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்குள் நுழைய வேண்டும் என்று பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாற்றம் கண்ட ஆபத்தான புதிய தொற்றை சனிக்கிழமை பயணி ஒருவரில் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
குறித்த பயணியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியானது மார்ச் மாத இறுதியில் கண்டறியப்பட்டது எனவும், அந்த நபர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் இருந்து சுவிஸ் திரும்பியுள்ளதாகவும், நேரடியாக இந்தியாவில் இருந்து சுவிஸ் வரவில்லை எனவும் பெடரல் சுகாதார அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இருப்பினும், தற்போது வரையில் சுவிஸ் குடிமக்கள் அல்லது சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி பெற்ற இந்தியர்கள், இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக, புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் கண்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக நாடுகள் பல இந்திய மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. சுவிஸில் உருமாற்றம் கண்ட கொரோனாவால் இதுவரை 42,600 பேர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.