சுவிஸ் கால்பந்து ரசிகர்களுக்கு மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை
யூரோ கிண்ணம் கால்பந்து தொடர்பில் முதல்முறையாக சுவிஸ் அணி காலிறுதிக்கு தெரிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை சுவிஸ் தேசிய அணி ஸ்பெயினுக்கு எதிராக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் விளையாடும்.
ஆனால் அங்குள்ள கொரோனா நிலவரம் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், புதன்கிழமை மட்டும் புதிதாக 1503 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 111 பேர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையிலேயே சுவிஸ் கால்பந்து ரசிகர்களுக்கு மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மட்டுமின்றி, சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரும் கால்பந்து ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து சுவிஸ் திரும்புவோர் கண்டிப்பாக தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக் இருத்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடுப்பூசி மறுப்பாளர்கள், தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் ரஷ்யாவுக்கு பயணப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.