போர்ச்சூழலில் உக்ரைனுக்கு சென்றுள்ள சுவிஸ் திரைப்பட இயக்குநர்: என்ன காரணம் தெரியுமா?
உக்ரைன் நாட்டிலிருந்து எல்லையை நோக்கி ஏராளம் வாகனங்கள் பயணித்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு கார் மட்டும் எல்லையிலிருந்து உக்ரைனுக்குள் சென்று கொண்டிருந்தது.
அந்தக் காரில் இருந்தது, சுவிட்சர்லாந்தின் வெற்றிகரமான இயக்குநரான Marc Raymond Wilkinsம் அவரது உக்ரைனிய மனைவியான Olgaவும்...
Wilkins சுவிட்சர்லாந்தில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்தவர். அவர் Kyivஇல் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். கடந்த இலையுதிர்காலத்தில்தான் அவரும் Olgaவும் திருமணம் செய்துகொண்டார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும், எல்லோரையும் போல Wilkins தம்பதியரும் உக்ரைனிலிருந்து வெளியேறி பெர்லினை வந்தடைந்துள்ளார்கள்.ஆனால், உக்ரைனில் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் விட்டு வந்ததால் வெறுமை உணர்வு வாட்ட, மனசாட்சி வாதிக்க, உடனடியாக மீண்டும் உக்ரைனுக்குச் செல்வதென முடிவு செய்துள்ளார்கள் தம்பதியர்.
அதன்படி இருவருமாக போலந்து சென்று, அங்கிருந்து உக்ரைன் நகரமான Lviv வந்தடைந்துள்ளார்கள். எல்லோரும் உக்ரைனிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்க, உக்ரைனுக்குள் சென்று கொண்டிருந்தது தாங்கள் மட்டும்தான் என்கிறார்கள் Wilkins தம்பதியர்.
தற்போது தங்கள் நண்பர்களுடன் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். நகரம் அமைதியாக இருக்க, ஆனாலும் அங்கிருக்கும் மக்கள் தாக்குதலை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு இராணுவப் பயிற்சி கிடையாது என்று கூறும் Wilkins, ஆனால், தாங்கள் தங்கள் வாகனம் ஓட்டும் திறனை சேவையாக வழங்கிவருவதாகவும், பாதுகாப்பு அரண்களுக்காக மணல் மூட்டைகளை நிரப்பும் வேலையையும் செய்துவருவதாக தெரிவிக்கிறார்.
தங்களால் முடிந்த முதல் விடயம் இரத்ததானம் செய்வது என்றும், அதற்காக தாங்கள் இருவரும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் அந்த வித்தியாசமான தம்பதியர்.