ஸ்பெயின் சென்ற சுவிஸ் விமானம்: இரண்டு மணி நேரம் காத்திருந்த பயணிகளுக்கு கிடைத்த ஏமாற்றம்
சுவிட்சர்லாந்திலிருந்து ஸ்பெயினுக்குச் சென்ற விமானம் ஒன்றில் பயணித்த பயணிகள், விமான நிலையத்தில் தங்கள் சூட்கேஸ்கள் முதலான உடைமைகள் வரும் என காத்திருந்தனர்.
ஸ்பெயின் சென்றடைந்த சுவிஸ் விமானம்
சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, ஸ்பெயினிலுள்ள Bilbao நகரை வந்தடைந்தது.
விமானத்திலிருந்து இறங்கிய 111 பயணிகளும், தங்கள் உடைமைகளுக்காக காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் காத்திருந்தும் அவர்களுடைய சூட்கேஸ் முதலான எந்த உடைமைகளும் வந்து சேரவில்லை.
அப்போதுதான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவந்துள்ளது.
பயணிகளுக்குக் கிடைத்த ஏமாற்றம்
அதாவது, சூரிச்சிலிருந்து புறப்பட்ட அந்த விமானத்தில், அந்த 111 பயணிகளில் ஒருவருடைய உடைமைகள் கூட ஏற்றப்படவில்லை.
ஆக, உடைமைகளை ஏற்றாமல், அந்த விமானம் பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு ஸ்பெயின் வந்தடைந்துள்ளது.
அதன் பிறகு, விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர், சூரிச் விமான நிலையத்தில் உடைமைகளை விமானத்தில் ஏற்ற பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததாகவும், அதே விமானம், ஸ்பெயினிலிருந்து மீண்டும் ஒரு முறை சூரிச்சுக்கு செல்ல வேண்டியிருந்ததால், உடைமைகளை ஏற்றாமலே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மற்றொரு விமானம் இந்த பயணிகளுடைய உடைமைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டதாக அவர் கூறினாலும், அவை எப்போது வந்தடையும் என்பதை அவர் கூறவில்லை. இந்த பிரச்சினையால் தங்கள் விடுமுறையே பாழாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள் பயணிகள் சிலர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |