குறைவாக இறைச்சி சாப்பிடுங்கள்... சுவிஸ் அதிகாரிகள் கோரிக்கை
சுவிஸ் மக்கள் அதிகமாக இறைச்சி சாப்பிடுவதாகக் கூறும் சுவிஸ் அதிகாரிகள், மக்கள் குறைவாக இறைச்சி சாப்பிடவேண்டுமென தெரிவித்துள்ளார்கள்.
பின்னணி
இப்படி மக்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களில் அதிகாரிகள் தலையிட என்ன காரணம்? அதாவது, சுவிட்சர்லாந்து விவசாயத்துக்கான பருவநிலை மூலோபாயத்தை வெளியிட்டுள்ளது.
2050வாக்கில், உணவு அமைப்பை நிலைப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த மூலோபாயத்தின் நோக்கங்களாகும்.
மேலும், விவசாயம் மூலமாக பசுமை வாயுக்கள் வெளியாவதைக் குறைத்தல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கேற்ற வகையில் விவசாயத்தை மாற்ற உதவுதல் ஆகியவையும் விவசாயத்துக்கான பருவநிலை மூலோபாயத்தின் நோக்கங்கள் என பெடரல் விவசாய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவாக இறைச்சி சாப்பிடவேண்டும்
இந்த இலக்குகளை அடைய சில நடவடிக்கைகள் அவசியம். உணவு வீணாவதைத் தடுத்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் விவசாயத் துறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றலை சேமித்தல், நுகர்வோரைப் பொருத்தவரை, அவர்களுக்குத் தேவையானது விழிப்புணர்வு, இவைதான் அந்த நடவடிக்கைகள்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் விவசாயத்துக்கான பருவநிலை மூலோபாயம் குறித்து பேசிய பெடரல் விவசாய அலுவலக அதிகாரியான Michael Beer, நம்முடைய அன்றாடக நடவடிக்கைகளில் மாற்றங்கள் தேவை என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, இறைச்சி உண்பது தொடர்பான விடயத்தில் மாற்றம் தேவை என்று கூறும் அவர், உடல் நலனைப் பொருத்தவரை, ஒருவர் வாரம் ஒன்றிற்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை மாமிசம் சாப்பிட்டாலே போதும். ஆனால், நாம் மூன்று மடங்கு அதிகமாக சாப்பிடுகிறோம் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |