இலங்கைக் குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து சட்டத்தில் மாற்றம் செய்ய விரும்பும் சுவிட்சர்லாந்து
இலங்கை உட்பட வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுவிஸ் நாட்டவர்களால் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தத்தெடுத்தல் செயல்முறைகளின்போது நடந்த முறைகேடுகளால், சர்வதேச தத்தெடுத்தல் சட்டத்தில் மீளாய்வு செய்யப்படவேண்டும் என விரும்புகிறது சுவிட்சர்லாந்து.
தத்துக்கொடுக்கப்பட்ட 11,000 இலங்கைக் குழந்தைகள்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டது தொடர்பான விசாரணை ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வந்த நிலையில், சூரிச் பல்கலை ஒன்று அது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கை, 11,000 இலங்கைக் குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தத்துக்கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்னும் அதிரவைக்கும் உண்மையை வெளிக்கொணர்ந்தது.
அதில் சுமார் 900 குழந்தைகள் சுவிஸ் குடிமக்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயங்கள் 1973க்கும் 1997க்கும் இடையில் நடைபெற்றவை ஆகும்.
பணம் பார்த்த இடைத்தரகர்கள்
குழந்தை ஒன்றிற்கு, சுமார் 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதல் 15,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை விலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 மாதம் பிள்ளையை சுமந்து பெற்ற தாய்க்கு மிகச் சிறிய தொகையே கொடுக்கப்பட்டுள்ளது. மீதியை இடைத்தரகர்கள் விழுங்கியிருக்கிறார்கள்.
இலங்கைக் குழந்தைகள் தத்துக்கொடுத்தல் விவகாரம் தொடர்பான ஆய்வைத் தொடர்ந்து, சுவிஸ் பெடரல் அரசுக்கு மற்றொரு ஆய்வறிக்கையும் கிடைத்துள்ளது.
அது, இந்தியா, பங்களாதேஷ், பிரேசில், சிலி, குவாதிமாலா, கொலம்பியா, கொரியா, லெபனான், பெரு மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளிலிருந்தும், சட்டவிரோதமாக குழந்தைகள் தத்துக்கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்த ஆய்வறிக்கை ஆகும். அந்த ஆய்வறிக்கையின் முடிவுகள், தத்துக்கொடுத்தலின்போது மேற்குறிப்பிட்ட நாடுகளிலும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை தெரியப்படுத்தியுள்ளன.
எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் நடக்கக்கூடாது என சுவிஸ் பெடரல் அரசு விரும்புகிறது. ஆகவே, நிபுணர் குழு ஒன்று சர்வதேச தத்தெடுத்தல் சட்டம் தொடர்பில் மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு, நிலைமையை ஆய்வு செய்து, 2024ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் விளக்கமான ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |