அகதிகளுக்கு உதவுவதற்காக சுவிட்சர்லாந்து மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை
போருக்குத் தப்பி சுவிட்சர்லாந்து வந்தடைந்துள்ள உக்ரைன் அகதிகளின் மொழி வகுப்புகளுக்காக சுவிஸ் பெடரல் கவுன்சில் நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி உக்ரைன் அகதி ஒருவருக்கு, மொழி வகுப்புகளுக்காக 3,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கூடுதலாக வழங்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கும், வேலை தேடிக்கொள்வதற்கும் மொழி அவசியம் என கருதப்படுகிறது.
இந்த விடயத்தை அனைத்து சுவிஸ் மாகாணங்களும் ஆதரிக்கும் நிலையில், பல மாகாணக்கள் அது மட்டும் போதாது என தங்கள் தரப்பு உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளன.
உக்ரைன் அகதிகளுக்காக மேலும் கூடுதலாக பணம் கொடுக்கவும் தயார் என்று கூறியுள்ள சுவிஸ் அரசு, ஆனால், உக்ரைன் ரஷ்யப் பிரச்சினை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரியவில்லை என்றும், உக்ரைன் அகதிகள் எவ்வளவு காலம் சுவிட்சர்லாந்தில் இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.
உண்மையில், சுவிஸ் பெடரல் அரசு, ஒரு அகதிக்கு ஆண்டொன்றிற்கு 18,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வீதம் மாகாணங்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது, கூடுதலாக 3,000 சுவிஸ் ஃப்ராங்குகளை அது வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.