திங்கட்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகும் சில புதிய கொரோனா கட்டுப்பாடுகள்
திங்கட்கிழமை முதல், சுவிட்சர்லாந்துக்கு வரும் கொரோனா தடுப்பூசி பெறாத, அல்லது கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடையாத பயணிகள், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும் என நேற்று (வெள்ளிக்கிழமை) சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்தாலும், அதிக அளவில் கொரோனா இருந்துகொண்டேதான் இருக்கிறது என்று கூறியுள்ள சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் இன்னமும் கொரோனா நோயாளிகளால் நிறைந்தே காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறையைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றும், அதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தன. தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டோரில் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் என தெரியவந்துள்ளது என்கிறார் Alain Berset.
அக்டோபரில் இரண்டு வார பள்ளி விடுமுறை ஒன்று வர இருப்பதால், அதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது என்றார் அவர்.
இன்னொரு விடயம், தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, சுவிட்சர்லாந்துக்கு வரும் பயணிகள் அனைவரும் ஆவணம் ஒன்றை நிரப்பவேண்டியிருக்கும். அத்துடன், தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கவேண்டிய அவசியமுள்ளவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த 4 முதல் 7 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக ஒரு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என அறிவிக்கப்படுள்ளது.
இந்த வாரம் முதல், சுவிட்சர்லாந்தில் உணவகம் மற்றும் மதுபான விடுதி முதலான இடங்களுக்குச் செல்வதற்கு மக்களுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
அத்துடன், ஒரு மகிழ்ச்சியான செய்தி... வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டோர், ஐரோப்பிய மருந்துகள் ஏஜன்சியால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களாக இருந்தால், அவர்களும் வரும் திங்கட்கிழமை முதல், சுவிஸ் கொரோனா சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் நேற்று சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.