சிவப்பு நிறமாக மாறிய சுவிஸ் ஏரி: எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்
சுவிஸ் ஏரி ஒன்றின் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ள நிலையில், அதில் நச்சுத்தன்மை கொண்ட பாசி ஒன்று பரவியுள்ளதைத் தொடர்ந்து, அது தொடர்பில் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளார்கள்.
பறவைகளைக் கொல்லும் பாசி
சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்திலுள்ள Zug ஏரியில் பரவிவரும் நச்சுத்தன்மைகொண்ட பாசி ஒன்று பறவைகளைக் கொன்றுவருகிறது.
ஆகவே, அந்த ஏரியில் மக்கள் நீந்தவோ, விலங்குகளை தண்ணீருக்குள் விடவோவேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
நீலப்பச்சை பாசி
பொதுவாக, இந்தப் பாசி நீலப்பச்சை பாசி என அழைக்கப்பட்டாலும், Zug ஏரியில் பரவிவரும் பாசியால் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
இது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வு என்பதால் தங்களால் பெரிதாக எதையும் செய்யமுடியாது என மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த ஜூன் மாதத்தில், Neuchatel மாகாணத்தில் இதேபோல் பாசி பெருகியபோது, அதனால் நாய் ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.