உக்ரைனில் சுவிஸ் தயாரிப்பான போர் வாகனங்கள் நிற்கும் புகைப்படம்: சர்ச்சையை உருவாக்கியுள்ள விடயம்
உக்ரைனில் சுவிஸ் தயாரிப்பான போர் வாகனங்கள் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
எதனால் சர்ச்சை?
சுவிட்சர்லாந்து, தனது தயாரிப்பான போர் வாகனங்களை ஒரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது, அந்த நாடுகள், அந்த போர் வாகனங்களை மற்றொரு நாட்டுக்கு மறுஏற்றுமதி செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்பேரில்தான் போர் வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது.
ஆகவே, அப்படி ஏற்றுமதி செய்யப்பட்ட போர் வாகனங்கள் மற்றொரு நாட்டில் காணப்படுமானால், சுவிட்சர்லாந்திடம் போர் வாகனங்கள் வாங்கிய ஏதோ ஒரு நாடு, ஒப்பந்தத்தை மீறி அதை மற்றொரு நாட்டுக்கு மறுஏற்றுமதி செய்துள்ளது என்று பொருள்.
நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து, இதுவரை உக்ரைனுக்கு ஆயுதங்கள் எதையும் அனுப்பவும் இல்லை, தன்னிடம் ஆயுதம் வாங்கிய நாடுகள் அவற்றை உக்ரைனுக்கு மறுஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கவும் இல்லை.
அப்படியிருக்கும் பட்சத்தில், உக்ரைனில் சுவிஸ் தயாரிப்பான போர் வாகனங்கள் நிற்பதாக வெளியாகியுள்ள புகைப்படங்களால் சர்ச்சை உருவாகியுள்ளது.
swissinfo
எப்படி சுவிஸ் போர் வாகனங்கள் உக்ரைனை அடைந்தன?
சுவிட்சர்லாந்து, 1990ஆம் ஆண்டு, டென்மார்க் நாட்டுக்கு 36 போர் வாகனங்களை ஏற்றுமதி செய்தது. டென்மார்க் அவற்றை சுவிட்சர்லாந்தின் அனுமதி இல்லாமல் வேறெந்த நாட்டுக்கும் மறுஏற்றுமதி செய்வதில்லை என ஒப்பந்தமும் செய்தது.
பின்னர், 2012ஆம் ஆண்டு, டென்மார்க், தான் சுவிட்சர்லாந்திடமிருந்து வாங்கிய போர் வாகனங்களில் 27 வாகனங்களை ஜேர்மன் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மறுஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்திடம் அனுமதி கோரியது.
2013ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து அனுமதியளித்ததன்பேரில், டென்மார்க் அந்த 27 போர் வாகனங்களையும் ஜேர்மனிக்கு மறுஏற்றுமதி செய்தது.
அந்த ஜேர்மன் நிறுவனமும், அந்த போர் வாகனங்களை சுவிட்சர்லாந்தின் அனுமதி இல்லாமல் வேறெந்த நாட்டுக்கும் மறுஏற்றுமதி செய்வதில்லை என்ற ஒப்பந்தத்திற்கு உடன்பட்டே அவற்றை வாங்கியது.
தற்போது, தாங்கள் உக்ரைனுக்கு எந்த போர் வாகனத்தையும் ஏற்றுமதி செய்யவில்லை என டென்மார்க் உறுதியாக தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த ஜேர்மன் நிறுவனம் போர் வாகனங்கள் எதையாவது உக்ரைனுக்கு வழங்கியதா என்பது குறித்து சுவிட்சர்லாந்து கேட்டுள்ளது. ஆனால், அந்த ஜேர்மன் நிறுவனத்திடமிருந்து எப்போது பதில் வரும் என்பது தெரியவில்லை!