வெளிநாடொன்றில் பெண் மருத்துவரைத் தாக்கிய சுவிஸ் நாட்டவர்: பெரிதாகும் பிரச்சினை
தாய்லாந்தில் வாழ்ந்துவரும் சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவரான அந்நாட்டுப் பெண் ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.
சுவிஸ் நாட்டவர் மீது பெண் மருத்துவர் குற்றச்சாட்டு
சுவிஸ் நாட்டவரான Urs Fehr (45), Khanuengnit என்னும் தாய்லாந்து நாட்டவரான தனது மனைவியுடன், தாய்லாந்திலுள்ள Phuket நகரில் வாழ்ந்துவருகிறார். இவர், அந்நகரில் யானைகள் காப்பகம் ஒன்றை நடத்திவருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, Urs Fehr தன்னை தாக்கியதாக Tarndao Chandam (26) எனும் பெண் மருத்துவர் பொலிசில் புகாரளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக மருத்துவச் சான்றிதழையும் அவர் பொலிசில் சமர்ப்பித்துள்ளார்.
சுவிஸ் நாட்டவர் அளித்துள்ள விளக்கம்
இந்த வழக்கு விசாரணையின்போது, தான் தடுக்கி விழும்போது தன் கால் அந்தப் பெண் மருத்துவர் மீது பட்டுவிட்டதாக முதலில் கூறியிருந்த Urs Fehr, அவர் அந்தப் பெண்ணைத் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகி பிரச்சினை பெரிதான பின், அந்தப் பெண்ணை வேறொருவர் என்று தவறாக நினைத்து தாக்கிவிட்டதாக தெரிவித்திருந்தார். Urs Fehrம் அவரது மனைவியும் அந்தப் பெண் மருத்துவரிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்கள்.
பெரிதாகும் பிரச்சினை
ஆனால், அந்த பிரச்சினை தீர்ந்தாற்போல் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டம் ஒன்றில் Miss Phuket அழகியான Lin Malin உட்பட பிரபலங்கள் பலர் Urs Fehr நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று கூறும் பதாகைகளை ஏந்தியவண்ணம் பங்கேற்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
விடயம் என்னவென்றால், இந்த விடயத்தில் சுவிஸ் தூதரகம் தலையிடவில்லையாம். இரு நாடுகளுக்குமிடையே பல ஆண்டுகளாக நல்லுறவு நீடித்துவரும் நிலையில், அதைக் கெடுத்துக்கொள்ள சுவிட்சர்லாந்து விரும்பவில்லை.
தாய்லாந்துக்கான சுவிஸ் தூதரான Pedro Zwahlen கூறும்போது, இந்த சம்பவம், பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்பையும் நல்லுறவையும் பாதிக்காது என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் தாய்லாந்து நீதித்துறை முடிவு செய்ய உள்ளது. விடயம் என்னவென்றால், பிரச்சினை பெரிதானாலும், Urs Fehrக்கு ஜாமீன் வழங்குவதற்காக அவர் செலுத்தவேண்டிய தொகை வெறும் 1,000 baht. சுவிஸ் கரன்சியில், 25 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே. Urs Fehrஇன் யானைகள் காப்பகத்துக்கான நுழைவுக் கட்டணமும் 25 சுவிஸ் ஃப்ராங்குகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |