கண் தெரியாது என்று கூறி அரசு உதவி பெற்றுவந்த சுவிஸ் நாட்டவர்: அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்...
சுவிஸ் மாகாணமொன்றில், தனக்குக் கண் தெரியாது என்று கூறி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெற்றுவந்த ஒரு நபர் மேல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்
சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் வாழ்ந்துவரும் ஒருவர், தனக்குக் கண் தெரியாது என்றும், எப்போதும் தலைசுற்றும் என்றும், நீண்ட நாட்களாக கடும் முதுகு வலி உள்ளது என்றும் கூறி அரசிடம் சுமார் அரை மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை நிதி உதவி பெற்றுள்ளார்.
ஆனால், அவரும் அவரது மனைவியும் ஆடம்பரமாக வாழ்ந்துவந்துள்ளார்கள். தங்களுக்கென்று சொந்தமாக பெரிய வீடு, இரண்டு கார்கள், ஒரு படகு ஆகியவை வைத்திருந்த தம்பதியர், சுற்றுலா செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கவே, அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விசாரணையில் தெரியவந்த உண்மை
சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தம்பதியரைக் கண்காணிக்கத் துவங்கினார்கள் அதிகாரிகள். அப்போது, தனக்குக் கண் தெரியாது என்று கூறியிருந்த அந்த நபர் யாருடைய உதவியும் இன்றி நடமாடுவதையும், கைத்தடி இல்லாமல் நடப்பதையும், கார் ஓட்டுவதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அத்துடன், அந்த நபர் மலையேற்றத்துக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
ஆக, அவர் பொய் சொல்லி அரசின் நிதி உதவியை வாங்கியுள்ளதாக வழக்குத் தொடர்ந்துள்ள அதிகாரிகள், தம்பதியருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆளுக்கு 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் அரசிடம் கோரியுள்ளார்கள்.
வழக்கு, தொடரும் நிலையில், தற்போது தம்பதியர் பிரிந்துவிட்டார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |