வலியால் துடித்த புலம்பெயர் கர்ப்பிணிக்கு உதவ மறுத்த சுவிஸ் அதிகாரிகள்: உயிரிழந்த குழந்தை
புலம்பெயர்ந்தோர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி வலியால் துடித்த நிலையிலும், சுவிஸ் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவ மறுத்துள்ளனர்.
அவரது வயிற்றிலிருந்த குழந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், அவருக்கு இழப்பீடு வழங்க சுவிஸ் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வலியால் துடித்த புலம்பெயர் கர்ப்பிணிப்பெண்
2014ஆம் ஆண்டு, இத்தாலியிருந்து பிரான்சுக்கு செல்வதற்காக புலம்பெயர்வோரான சிரிய நாட்டவர் ஒருவரும் அவரது மனைவியும் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.
சுவிஸ் எல்லையில், அவர்களை சுவிஸ் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் வழிமறித்து, அவர்களையும் அவர்களுடன் வந்த 30 புகலிடக்கோரிக்கையாளர்களையும் திருப்பி இத்தாலிக்கே அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், இத்தாலிக்குச் செல்லும் ரயிலுக்காக Brig என்னும் நகரில் அவர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருக்கும்போது, அந்தப் பெண் வலியால் துடித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் கணவரும் உதவி கோரி கண்ணீர் விட்டுக் கதறியும், சுவிஸ் பாதுகாப்புப்படையினர் அந்தப் பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யவில்லையாம்.
அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக ஒரு ஆம்புலன்சைக் கூட அவர்கள் அழைக்கவில்லையாம்.
இத்தாலியை வந்தடைந்தபோது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டிருக்கிறது.
இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த துயர சம்பவம் நீதிமன்றத்தை அடைந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு 12,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று, அந்தப் பெண்ணின் கணவருக்கும் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்க சுவிஸ் பெடரல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Brigஇல் நடந்த விடயங்களால் அவர் நேரடியாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், உதவி கிடைக்காமல் தனது மனைவி துடிதுடித்துக்கொண்டிருக்கும் காட்சியை அவர் காண நேர்ந்ததாகவும், அவரது மனோரீதியான தனியுரிமை மீறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |