சுவிஸ் நாடாளுமன்றம் வெளியே மர்ம நபர்: சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்
சுவிஸ் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே வெடிகுண்டுகளுடன் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் அனைத்தும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பெரும் அசம்பாவிதம்
குறித்த விவகாரம் தொடர்பில் பெர்ன் பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மர்ம நபரின் நடமாட்டம் காணப்பட்டதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை முன்னெடுக்கவும், அவரிடம் சோதனை மேற்கொள்ளவும் செய்ததில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
@AP
அந்த நபர் குண்டுதுளைக்காத உடை அணிந்திருந்ததுடன், வெடிப்பொருட்களும் உடன் வைத்திருந்துள்ளார். அந்த நபர் தொடர்பில் வேறு தகவல் எதையும் வெளியிடாத நிலையில், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், உடற் தகுதி மற்றும் உளவியல் தகுதி தொடர்பில் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவியல் விசாரணை
இந்த நிலையில் பெடரல் அரசு சட்டத்தரணிகள் மற்றும் பொலிசார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சாத்தியமான நோக்கம் பற்றி உடனடி தகவல் எதுவும் இல்லை என்றே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற வளாகம் மொத்தம் பல மணி நேரம் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மோப்ப நாய்கள், ட்ரோன் விமானங்கள் மூலமாக கண்காணித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, சந்தேக நபரால் கைவிடப்பட்ட கார் தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் முன்னெடுக்கப்பட்டதில்லை, ஆனால் அது தொடர்பில் பெடரல் பொலிசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.