சுவிட்சர்லாந்தில் காவல்துறை பயிற்சி மாணவர்களுக்கு சைவத் தமிழ் பண்பாடு குறித்து பயிற்சி
சமயங்களைக் கடந்து மனிதர்களை நேர்காணும் உரையாடல் பல்சமய இல்லத்தில் (Haus der Religionen ) கடந்த 2022 முதல் காவல்துறை பயிற்சி மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் உரையாடல் நாள் பல்சமயத்துறையில் நடைபெற்று வருகின்றது.
பல்சமயங்களையும், பல்பண்பாடுகளையும், மொழிகளையும் கொண்ட சமூகத்தில் காவல்துறையினர் தமது கடமைகளை ஆற்றும்போது சட்ட அறிவுக்கு அப்பால் சமூகப் புரிதலும் மாந்தர் அன்பு அணுகுமுறையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இத்தகைய புரிதலையும் பட்டறிவினையும் (அனுபவத்தையும்) வளர்க்கும் நோக்கில் Bern நகரிலுள்ள பல்சமய இல்லத்தில் (Haus der Religionen – Dialog der Kulturen) காவல்துறை பயிற்சி மாணவர்களுக்கான சந்திப்பு மற்றும் உரையாடல் நாள் அமைகின்றது. 2026ம் ஆண்டு காவற்துறை மாணவர்களுக்கான இறுதி ஆண்டுப்பயிற்சி 25. மற்றும் 26. 11. 2026 நடைபெற்றது.
சுவிற்சர்லாந்தில் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் காவல்துறையினர் பல்வேறு சமயப், பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்ட மக்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய சூழல்கள் உருவாகின்றன. இவ்வேளைகளில் மக்களின் நம்பிக்கைகள் சமய வழக்கங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் புரிந்துகொள்வது, சூழ்நிலைகளைச் சரியான முறையில் அணுகுவதற்கு உதவியாக வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சைவநெறிக்கூடம் ஈழத்தமிழர் வாழ்வியல் முறையினையும் சைவத்தமிழ் பண்பாட்டினை விளக்கி பயிற்சி அளித்தது.
பல்வேறு மதச் சமூகங்களின் சார்பாளர்களிடம் காவல்துறை பயிற்சி மாணவர்கள் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர். சமயங்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள் மற்றும் சமூக வாழ்வில் சமயம் வகிக்கும் பங்கு தொடர்பான பல்வேறு விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் கேள்விகள் எழுப்பப்பட்டு திறந்த மனதுடன் கருத்துகளும் பரிமாறப்பட்டன.
காவல்துறையின் அன்றாடப் பணிகளில் சமயம் மற்றும் பண்பாடு சார்ந்த விடயங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் இத்தகைய சூழ்நிலைகளில் ஏற்படக்கூடிய தவறான புரிதல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் இச்சந்திப்புகள் எடுத்துரைத்தன.
சவாலான சூழ்நிலைகளில் பொறுமையுடனும் நிஙர்(சம)நிலையுடனும் மரியாதையுடனும் அணுகுவதற்கான நடைமுறைப் புரிதல்களை வளர்த்துக்கொள்ள இந்நிகழ்வு வழிவகுத்தது.
நூல்களிலும் பாடத்திட்டங்களிலும் பெறும் அறிவைத் தாண்டி நேரடி உரையாடலின் மூலம் உருவாகும் புரிதலும் நம்பிக்கையும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பல்சமயங்கள், இனங்கள் வாழும் பல்வினப்பல்பண்பாட்டு சமூகத்தில் உரையாடல் என்பது வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமல்ல, அது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் மதிப்பதற்கும், இணைந்து வாழ்வதற்குமான ஒரு பாலமாகும்.
இத்தகைய பலமாக சைவநெறிக்கூடத்தின் பங்களிப்பு அமைந்திருந்தது.
காவல்துறை கட்டளைத் தளபதியின் துணைநிலை அதிகாரி மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் தலைவர். சுவிற்சர்லாந்து கிழக்கு காவல்துறை பயிற்சிப் பள்ளியின் சமூகம் மற்றும் காவல்துறை என்ற பாடத்திட்டத்தின் ஆழ்நிலைப் பயிற்சிப் பாடப்பிரிவின் பொறுப்பாளர் மற்றும் காவல்துறை துணைக் கட்டளைத் தலமைநிலை அதிகாரி மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் தலைவர் திரு. றொலாந் கெம்மி (Roland Hemmi) எதிர்வரும் மாதங்களில் ஓய்வு பெறுகின்றார்.
சைவநெறிக்கூடம் - பயிலரங்கு பயிற்றுனர் திருமதி கார்த்திகா முரளிதரன், இளையோர் மன்ற உறுப்பினர் - பிறைபூர்க் பல்கலைக்கழக கல்வியல் மற்றும் உளவியல்துறை மாணவி அபிராமி சுரேஸ்குமார் ஆகியோர் சைவநெறிக்கூடத்தின் சார்பில் இவருக்கு பொன்னாடை அணிவித்து மதிப்பளித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |




