உங்கள் எரிவாயு எங்களுக்கு வேண்டாம்... ரஷ்ய எரிவாயுவை புறக்கணிப்பதற்காக சுவிஸ் மாகாணங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
ரஷ்ய எரிவாயுவை புறக்கணிப்பது குறித்த விவாதங்களில் சுவிட்சர்லாந்து ஈடுபட்டுள்ள நிலையில், சூரிச் மற்றும் பேர்ண் மாகாணங்கள் இரண்டும் அதை செய்தே காட்டிவிட்டன.
ஆம், சூரிச்சிலுள்ள Schlieren மாவட்ட அதிகாரிகள், தங்கள் முனிசிபாலிட்டியிலுள்ள நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரை சூடாக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்கள். புடினுடைய போருக்கு நிதியுதவி செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
தண்ணீரை சூடாக்காமல் விட்டுவிட்டதால், அதை ஈடு செய்யும் வகையில், மே மாதம் முழுவதும் நீச்சல் குளத்துக்கு வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், ஜூன் மாதம் முதல், வழக்கமான கட்டனத்தைவிட 30 சதவிகிதம் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
அதேபோல, பேர்ணிலுள்ள Langenthal நகர அதிகாரிகளும் ரஷ்ய எரிவாயுவைப் பயன்படுத்தி தங்கள் நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரை சூடாக்கப்போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்து அதைப் பயன்படுத்தி தண்ணீரை வெதுவெதுப்பாக வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.