கணவரை சந்திக்க சிறையிலிருக்கும் கர்ப்பிணிப்பெண்ணுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றம் சாடல்
சிறையிலிருக்கும் கர்ப்பிணிப் பெண்ணொருவரை சந்திக்க அவரது கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சுவிட்சர்லாந்தை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கர்ப்பிணி மனைவியை சந்திக்க அனுமதி மறுப்பு
ஸ்பெயின் நாட்டவரான பெண்ணொருவர், போதைப்பொருள் கடந்தியதாக சந்தேகத்தின் பேரில் சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

கர்ப்பிணியான அவர், கர்ப்பகாலத்தின்போதும், பிரசவத்தின்போதும், தன் கணவர் தன்னுடன் இருக்க அனுமதி கோரியிருந்தார்.
ஆனால், சுவிஸ் அதிகாரிகளும், நீதிமன்றங்களும் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்த விடயம் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை எட்டிய நிலையில், அந்த கர்ப்பிணிப்பெண்ணின் கோரிக்கை மறுக்கப்பட்ட விடயம், அவரது குடும்ப வாழ்வில் அநியாயமான தலையீடு என நீதிமன்றம் சாடியுள்ளது.
கர்ப்பிணிப்பெண்ணொருவர் தனது கணவரை சந்திக்க அனுமதி மறுத்த விடயம், ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தின் 8ஆவது பிரிவை மீறும் விடயமாகும் என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆகவே, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, இழப்பீடாக 1,730 யூரோக்களையும், வழக்குச் செலவுகளுக்காக 4,000 யூரோக்களையும் சுவிட்சர்லாந்து செலுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |