39 சதவிகித வரி விதித்த ட்ரம்ப்: சுவிஸ் அரசியலில் பரபரப்பு
சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் 39 சதவிகித வரி விதித்த விடயம், சுவிஸ் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் 39 சதவிகித வரி விதித்ததற்கு சுவிஸ் ஜனாதிபதிதான் காரணம் என சுவிஸ் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஏப்ரல் மாதம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல்வேறு வர்த்தகக் கூட்டாளர் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகள் வரிகளைக் குறைப்பதற்காக ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு 10 சதவிகித வரிகளே விதிப்பார் என பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், வழக்கம்போல ட்ரம்ப் தன் இஷ்டத்துக்கு சுவிட்சர்லாந்து மீது 39 சதவிகித வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்தார்.
அதனால் சுவிஸ் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைய, சுவிஸ் கைக்கடிகார உற்பத்தியாளர்கள் உட்பட பல துறைகளைச் சார்ந்தோர் ஸ்தம்பித்து நிற்கிறார்கள்.
இந்நிலையில், ட்ரம்ப் 39 சதவிகித வரி விதித்ததால் ஏற்பட்ட கோபம், சுவிஸ் ஜனாதிபதியான கரின் கெல்லரை (Karin Keller-Sutter) நோக்கித் திரும்பியுள்ளது.
விடயம் என்னெவென்றால், கடந்த வியாழக்கிழமை மாலை, கெல்லர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்பும் ட்ரம்ப் சுவிட்சர்லாந்து மீது 39 சதவிகித வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்தார்.
ஆக, கெல்லர் ட்ரம்புடன் சரியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை, அவர் கோபக்காரர், அவர் ட்ரம்ப் சொல்லவருவதை நிதானமாக கவனிக்காமல் மோசமான வகையில் பேச்சுவார்த்தையைக் கையாண்டதாலேயே ட்ரம்ப் 39 சதவிகித வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார் என ஊடகங்கள் கெல்லரை கிழித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால், அரசு தரப்போ, பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை, கெல்லர் ஒன்றும் ட்ரம்புடன் சண்டையிடவில்லை. ட்ரம்ப் 39 சதவிகித வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்துள்ளதற்கு கெல்லர் ட்ரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை காரணம் அல்ல என்கிறது.
ட்ரம்ப் ஆரம்பத்திலேயே 10 சதவிகித வரிகள் போதுமானதல்ல என்பதை தெளிவுபடுத்திவிட்டார் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |