நூற்றுக்கணக்கான ரயில்களில் குளறுபடி செய்து பயணிகளின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்திய சுவிஸ் நாட்டவர்: பதறவைக்கும் ஒரு செய்தி
சுவிஸ் ரயில்வே ஊழியர் ஒருவர், நூற்றுக்கணக்கான ரயில்களின் பிரேக்குகளில் கோளாறை ஏற்படுத்தி, ஏராளம் ரயில் பயணிகளின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இயங்கும் ரயில்கள் பலவற்றின் பிரேக்குகளில் பழுது இருந்தது தொடர்பாக பல ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு புகாரளித்துள்ளார்கள். அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு சோதிக்கப்பட்ட நிலையில், 26 வயதுடைய ஊழியர் ஒருவர், பணிமனைக்கு வரும் ரயில்களில் கோளாறு உள்ள பிரேக்குகளை நல்ல பிரேக்குகள் என்று கூறி சான்றளித்துள்ளது தெரியவந்தது.
அதை நம்பி அந்த பிரேக்குகள் பயணிகள் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன. பல மாதங்களாக அவர் இப்படி செய்து வந்ததில் நூற்றுக்கணக்கான ரயில்களில் பழுதுள்ள பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பிரேக்குகள் பொருத்தப்பட்ட ரயில்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அவசரமாக பிரேக் பிடிக்க நேரிட்டால் அந்த ரயில்கள் உடனடியாக நிற்காமல் பெரும் விபத்து நேரிட்டிருக்கும். ஏராளமான பயணிகள் விபத்தில் சிக்கியிருப்பார்கள்.
ஆகவே, ஏராளமான பயணிகளின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் தன் பணி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால், அவர் ரயில்களின் பிரேக்குகளில் வேண்டுமென்றே கோளாறு ஏற்படுத்தினார் என்ற வாதத்தை பெடரல் நிர்வாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.