அகதிகள் சுவிட்சர்லாந்தில் சுவிஸ் வாழிட உரிமம் பெறுவது எப்படி?
சமீபத்திய சில வாரங்களாக உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், அவர்களும் மற்ற புகலிடக் கோரிக்கையாளர்களும் சுவிட்சர்லாந்தில் நிரந்தர வாழிட உரிமம் பெறும் தகுதி பெறுவார்களா என ஒரு கேள்வி எழுந்துள்ளது.
இந்த உக்ரைன் புகலிடக் கோரிக்கையாளர்களைப் பொருத்தவரையில், அவர்கள் தற்காலிகமாக சுவிட்சர்லாந்துக்கு வந்திருப்பதாகத்தான் சுவிஸ் அரசு எதிர்பார்க்கிறது. அதற்கு என்ன காரணம் என்றால், சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ள அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். ஆகவே, போர் முடிவுக்கு வந்ததும், அந்தப் பெண்கள் தங்கள் கணவர்களைத் தேடி மீண்டும் செல்லவே விரும்புவார்கள் என்பதால்தான் அப்படி சுவிஸ் அரசு கருதுகிறது.
ஒருவேளை அவர்கள் சுவிட்சர்லாந்திலேயே தங்கிவிட முடிவு செய்துவிட்டால் என்ன நடக்கும்? அவர்களுக்கு நிரந்தர வாழிட அனுமதி B permit கிடைக்குமா? இன்னும் சிறிது காலம் சென்றபின் அவர்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட் கிடைக்குமா? அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான விதிகளும், மற்ற அகதிகள் குடியுரிமை கோருவதற்கான விதிகளும் ஒன்றா?
அது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்...
சுவிட்சர்லாந்தில், அகதிகளின் சட்டப்பூர்வ நிலை என்ன?
இப்போதைக்கு, உக்ரைனிலிருந்து தப்பி வருவோருக்கு ஒரு special S status வழங்கப்படுகிறது. அது அவர்கள் சுவிட்சர்லாந்தில் தங்கவும், பணி செய்யவும், இலவசமாக மருத்துவ உதவி பெறவும், மொழி வகுப்புகளில் சேரவும் அவர்களுக்கு அரசு அளிக்கும் தற்காலிக அடையாள ஆவணம்.
அந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கது, ஆனால், அது நீட்டிக்கப்படலாம்.
மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் கூற்றுப்படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாப்பு வழங்கப்படுவதற்கான தேவையிலிருப்போருக்கு B வாழிட அனுமதி வழங்கப்படலாம். அது, தற்காலிக பாதுகாப்பு நிலை நீக்கப்படும் வரைதான் செல்லத்தக்கதாகும்.
அதன் பொருள் என்னவென்றால், உக்ரைனில் நிலைமை சீராகி அங்கு திரும்புவது அகதிகளுக்குப் பாதுகாப்பானது என கருதப்படும் நிலை உருவாகும்போது, அவர்களது S அல்லது B நிலை ரத்து செய்யப்படும்.
அப்படியானால், அகதிகள் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கவே முடியாதா?
இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு நிலை சுவிட்சர்லாந்தில் ஏற்படவில்லை என்பதால், இந்தக் கேள்விக்கான பதில் தெளிவாகத் தெரியவில்லை.
பொதுவாகக் கூறினால், அங்கீகரிக்கப்பட்ட அகதிகள், தாங்கள் சட்டப்படி தங்கியிருக்கும் மாகாணத்தில் B வாழிட அனுமதி பெற தகுதியுடையவர்கள் என மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் கையேடு ஒன்று தெரிவிக்கிறது.
ஆக, உக்ரைனியர்கள் உட்பட, அகதிகளின் S அல்லது B நிலை ரத்து செய்யப்படாவிட்டால், அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்க முடியும்.
இருந்தாலும், இது எழுத்தில் உள்ளதுதான், நடைமுறையில் அது எப்படி நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.