முடக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களைக் கேட்ட உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்தின் பதில்...
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களை, உக்ரைனை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக பயன்படுத்தவேண்டும் என்ற உக்ரைன் பிரதமரின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து நேரடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய தாக்குதல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு 750 பில்லியன் டொலர்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த பணியை, முடக்கப்பட்டிருக்கும் ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களைப் பயன்படுத்தி செய்துமுடிக்கவேண்டும் என உக்ரைன் பிரதமரான Denys Shmygal கோரியுள்ளார்.
ஆனால், சுவிட்சர்லாந்து அவரது கோரிக்கைக்கு நேரடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை!
சுவிட்சர்லாந்து, ரஷ்ய செல்வந்தர்களின் 6.3 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில், அந்த சொத்துக்களை அப்படியே உக்ரைனிடம் தூக்கிக்கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis, பெரும்பாலான குடியரசுகளின் விதிகளின்படி, நாம் சொத்துக்களை முடக்கலாம், அவை எங்கிருந்து வந்தன என்பதற்கான விளக்கத்தைப் பெறுவதற்காக அவற்றை முடக்கலாம்.
ஆனால், அவற்றுக்கும் உக்ரைனில் நடைபெறும் போருக்கும் உள்ள தொடர்புகள் குறித்த கேள்விகள், மற்றும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளின் அளவு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.