மீன் உணவில் தயாரிக்கப்படும் ரோபோக்கள்: சுவிஸ் ஆய்வாளர்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு
சுவிஸ் ஆய்வாளர்கள், மீன் உணவைக்கொண்டு சிறிய ரோபோக்களை தயாரித்துள்ளார்கள்.
மீன் உணவில் ரோபோக்கள்
Lausanne ஆய்வாளர்கள் குழு ஒன்று இந்த ரோபோக்களை தயாரித்துள்ளது.
மீன்கள் உண்ணும் உணவிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், நீர் நிலைகளின் நிலைமை குறித்த தரவுகளை சேகரிப்பதுடன், நீரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகளையும் விநியோகிக்கும் பணியையும் செய்கின்றன.
ஐந்து சென்றிமீற்றர் நீளமே உடைய இந்த ரோபோக்களுக்குள், மீன் உணவும், படகு போல் இந்த ரோபோக்களை இயக்குவதற்கான ரசாயனங்களும் வைக்கப்பட்டுள்ளன.
சிறுபிள்ளை விளையாட்டு போல் இயங்கும் ரோபோ
சிறு வயதில், பிளாஸ்டிக் தட்டுக்களிலிருந்து படகு வடிவில் சிறு துண்டுகளை வெட்டி, அவற்றின் வால் பகுதியில் ஒரு துண்டு கற்பூரத்தை செருகி வைத்து தண்ணீரில் விட்டால், அவை தானாக நகர்வதை பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் நம்மில் பலர் இருக்கலாம்.
அதேபோன்றதொரு முறையில்தான் இந்த ரோபோக்கள் இயங்குகின்றன. இந்த படகு வடிவிலான ரோபோக்களின் ஒரு பகுதியில், சிறிது பேக்கிங் சோடாவும், சிட்ரிக் அமிலமும் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த இரண்டு ரசாயனங்களும் ஒன்று சேரும்போது, அவை கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும்.
அந்த கார்பன் டை ஆக்சைடு, propylene glycol என்னும் திரவத்தை வெளியே தள்ள, அந்த திரவம் தண்ணீரில் பட்டதும் தண்ணீரின் பரப்பு இழுவிசை குறைய, அதனால் படகு தானே நகரத் துவங்கும்.
பல நிமிடங்கள் நீந்தும் இந்த ரோபோக்கள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |