ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுவிஸ் குறும்படம்!
சுவிட்சர்லாந்த்து 30 ஆண்டுகளுக்கு பிறகு Ala Kachuu எனும் குறும்படத்துக்காக ஆஸ்கார் விருதை பெரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
38 நிமிட நீளம் கொண்ட இந்த குறும்படம், கிர்கிஸ்தானைச் சேர்ந்த 19 வயதான செசிம் என்ற பெண், பல்கலைக்கழகம் செல்லும் தனது கனவை நிறைவேற்ற விரும்பும் கதையைச் சொல்கிறது. இருப்பினும், அவள் கடத்தப்பட்டு யாரோ ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.
இந்த சூழலில் அப்பெண் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்கிறார்: ஒன்று, அவர் திருமணத்தை மறுத்து, சமூக இழிவுபடுத்தல் மற்றும் விலக்கலை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது அவர் கனவைப் பின்பற்ற வேண்டும்.
கிர்கிஸ்தானில் இந்த வழக்கம் சட்டவிரோதமானது என்றாலும், பாரம்பரியம் என்ற போர்வையில் உலகின் பிற பகுதிகளில் இது இன்னும் பரவலாக உள்ளது என்று இப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான Marie Brendle படத்தின் இணையதளத்தில் தெரிவித்தார்.
"அலா கச்சு" (Ala Kachuu) என்று அழைக்கப்படும் கடத்தலுக்குப் பிறகு சில பெண்கள் மட்டுமே திருமணத்திலிருந்து தப்பிக்க முடிகிறது. சமூகத்தில் "நிராகரிக்கப்படுவார்கள் மற்றும் ஒதுக்கிவைக்கப்படுவார்கள் என்ற பயத்தில் பலர் தங்கள் தலைவிதியை ஏற்றுக்கொள்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
Ala Kachuu என்றால் 'தூக்கிக்கொண்டு ஓடு', 'எடுத்துக்கொண்டு ஓடு' (Take and Run) என்று அர்த்தம்.
'அலா கச்சு' என்றே தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம், "பெண்களின் உரிமைகள் குறித்த சமூகத்தின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், அரிதாகக் கேட்கப்படுபவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் பங்களிக்க விரும்புவதாக" பிரெண்டில் கூறினார்.
இப்படத்தில், Sezim எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் அலினா துர்துமாமடோவா (Alina Turdumamatova) நடித்துள்ளார்.
பிரெண்டில், 38, ஜேர்மனியில் பிறந்தார் மற்றும் சூரிச் கலைப் பல்கலைக்கழகத்தில் படித்த அவர் சூரிச்சில் வசித்து வருகிறார்.
சுவிட்சர்லாந்து நடிகர் அல்லது இயக்குநர் ஆஸ்கார் விருதை வென்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
கடைசியாக, 1991-ல் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பான ஜர்னி ஆஃப் ஹோப் (Journey of Hope) படத்திற்காக, இயக்குநர் Xavier Koller ஆஸ்கார் விருதைப் பெற்றார்.
செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட Oscar தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்த ஐந்து படங்களில் அலா கச்சுவும் ஒன்று.
இந்நிலையில், இந்த படத்தின் மூலம் சுவிஸ் மீண்டும் ஒரு ஆஸ்கார் விருதை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 94-வது அகாடமி விருது விழா ஹாலிவுட்டில் மார்ச் 27-ஆம் திகதி நடைபெற உள்ளது.