இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர் உயிரை பலிவாங்கிய சம்பவம்: சுவிஸ் நகரம் செய்துள்ள செயல்
1989ஆம் ஆண்டு, சுவிஸ் நகரமொன்றில் இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று வாழ்ந்த வீடு தீவைத்துக் கொளுத்தப்பட்ட விடயம் தொடர்பில் அந்நகரம் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர் பலியான சம்பவம்
1989ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 2ஆம் திகதி, கிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள Chur என்னும் நகரில், இலங்கைத் தமிழர்களான புகலிடக்கோரிக்கையாளர்கள் குடும்பம் ஒன்று வாழ்ந்த வீடு தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

அந்த துயர சம்பவத்தில், இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தார்கள்.
அந்த தாக்குதலின் பின்னணியில் இனவெறுப்பு இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையிலும், அது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
சுவிஸ் நகரம் செய்துள்ள செயல்
இந்நிலையில், அந்த துயர சம்பவம் நிகழ்ந்து 37 ஆண்டுகளுக்குப் பின், வியாழக்கிழமையன்று, உயிரிழந்த அந்த நான்கு இலங்கைத் தமிழர்களுக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
அத்துடன், அவர்கள் கொல்லப்பட்ட வீடு அமைந்திருந்த தெருவுக்கு ’நான்கு விளக்குகள் வீதி’ என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த இடத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவுப்பலகை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய நகர மேயரான Hans Martin Meuli, 1989ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் Chur நகரின் வரலாற்றில் ஒரு வேதனையான அத்தியாயம் என்று கூறியுள்ளார்.
அந்த நேரத்தில், அந்த தாக்குதலின் பின்னணியில் இனவெறி அல்லது தீவிர வலதுசாரி நோக்கம் இருப்பது தொடர்பில் எழுந்த சந்தேகங்கள் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன் காரணமாக, அந்த சம்பவம் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் போனது என்றும், அது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கும் கூடுதல் துன்பத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.
நடந்ததை Chur நகரத்தால் மாற்ற முடியாது, இழந்த உயிர்களைத் திரும்பக் கொண்டுவர முடியாது, ஆனால், அந்த நேரத்தில் என்ன செய்யப்படவில்லை, என்ன தெளிவுபடுத்தப்படவில்லை என்பதை இப்போது Chur நகரத்தால் தெளிவாகக் கூற முடியும், கூறியே ஆக வேண்டும், என்றும் கூறியுள்ளார் அவர்.
அந்த நேரத்தில் அதிகாரிகளின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தமிழ் சமூகத்தின் மீதான தங்களது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றும், இந்தப் பொறுப்பை Chur நகரம் ஏற்றுக்கொள்கிறது என்றும் நகர மேயரான Hans Martin Meuli கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |