ஜனவரி மாதம் முதல் இந்த நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துக்கு தாராளமாக வந்து வாழலாம்: வெளியாகியுள்ள அறிவிப்பு
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் முதல், குரோவேஷியா நாட்டவர்கள் தடையின்றி சுவிட்சர்லாந்துக்கு வரலாம் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
நேற்று சுவிட்சர்லாந்து வெளியிட்ட அந்த அறிவிப்பில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான குரோவேஷியா நாட்டு மக்கள், ஜனவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்துக்கு வந்து வாழவும் பணி செய்யவும் அனுமதியளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, இது தொடர்பான தனது முடிவை நேற்று சுவிஸ் ஐரோப்பிய ஒன்றிய மக்களின் தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தத்திற்கான கமிட்டியின் சந்திப்பு ஒன்றின்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அல்ல. ஆனால், பொருளாதார கூட்டாளர்களான இரு தரப்பினரும் 1999ஆம் ஆண்டு மக்களின் தடையில்லா போக்குவரத்து தொடர்பில், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்கள். அந்த ஒப்பந்தம் 2002இல் அமுலுக்கு வந்தது.
குரோவேஷியா 2013இல்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. 2017 முதல் சில கட்டுப்பாடுகளுடன் குரோவேஷிய மக்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.
அந்த கட்டுப்பாடுகள், 2022 ஜனவரி 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றன.
அதே நேரத்தில், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயரும் குரோவேஷியா நாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லுமானால், 2023 ஜனவரி 1 அன்று மீண்டும் அந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சுவிட்சர்லாந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.