இந்தியா வந்த சுவிஸ் சுற்றுலாப்பயணியிடம் கொள்ளை: 24 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் கைது...
இந்தியா வந்த சுவிஸ் சுற்றுலாப்பயணி ஒருவரிடம் மர்ம நபர்கள் சிலர் கைவரிசை காட்டிய நிலையில், 24 மணி நேரத்துக்குள் பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளார்கள்.
விசாகப்பட்டினம் சென்றிருந்த சுற்றுலாப்பயணி
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுவிஸ் சுற்றுலாப்பயணி ஒருவர் பாராகிளைடிங் செய்வதற்காக ஆந்திரா சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவரிடம் கொள்ளையடித்துள்ளார்கள்.
நேற்று முன்தினம், புதன்கிழமை, நோவா (Noah Ellis, 24) என்னும் அந்த சுற்றுலாப்பயணி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலுள்ள யாரதா கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, மூன்று பேர் அவரது கையிலிருந்த மொபைல் போனைப் பறித்துச் சென்றுள்ளார்கள். இதுகுறித்து பொலிசாரிடம் அவர் புகாரளித்த நிலையில், பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடத் துவங்கினார்கள்.
24 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் கைது
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள், ஸ்ரீஹரிபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த அங்கம் பாபி குமார் (19), இந்திரா நகர் என்னுமிடத்தைச் சேர்ந்த சாய் பிரதாத் (20) மற்றும் பிரசாத் (20) ஆகியோர் ஆவர்.
எந்த இடத்திலிருந்து பாராகிளைடிங் செய்யலாம் என முடிவு செய்வதற்காக நோவா பாறை ஒன்றில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, மது அருந்துவதற்காக வந்த இந்த மூன்று இளைஞர்களும் வெளிநாட்டவரிடம் நிறைய பணம் இருக்கும் என்று எண்ணி அவரைத் தாக்க, அவரோ தனது காலி பர்ஸைத் திறந்து காட்டியிருக்கிறார்.
உடனே அந்த இளைஞர்கள் அவரது மொபைல் போனைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்கள்.
ஒரு பக்கம் நோவா பொலிசாரிடம் புகாரளிக்க, மறுபக்கம் பொதுமக்கள் பொலிசாரை அழைக்க, CCTVகாட்சிகள் மூலம் அந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டுள்ளார்கள்.
ஆட்டோ சாரதி ஒருவர் அந்த இளைஞர்களை அடையாளம் காட்ட, பொலிசார் அவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |