சுவிஸ் பராம்பரிய உணவகம் ஈழத்தமிழர் கைகளில்
சுவிற்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் உள்ள போட்ரால் (Böztal) என்னும் ஊரில் அமைந்துள்ள “பேறென்” விருந்தகம் புதிய உரிமையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
சுவிற்சர்லாந்தில் எட்டு தலைமுறைகளாக குடும்ப பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த இவ்வுணவகம், இப்போது ஒரு ஈழத்தமிழரிடம் ஒப்படைக்கப்பட்டு புதிய தலைமுறையுடன் அதன் மரபைத் தொடர்கிறது.
ஈழத்திலிருந்து அகதிகளாக சுவிற்சர்லாந்துக்கு குடிபெயர்ந்த தமிழர்கள் இன்று ஊராட்சி, நகரசபை மற்றும் மக்கள் அவை வரை பல்வேறு நிலைகளில் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர்.
அனைத்து துறைகளிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஈழத்தமிழ் வழித்தோன்றல்கள் பல்திறனுடன் முன்னேறி வருவது தமிழ் சமூகத்திற்கு பெருமையையும் நிமிர்ச்சியையும் அளிக்கிறது.
தொடக்க காலங்களில் தமிழர்கள் பலர் தொழில்வாய்ப்பாக விருந்தோம்பல் துறைக்குள் நுழைந்தனர். அது முதன்மைத் தெரிவாக அமைந்ததற்கு பல காரணங்கள் இருந்தன.
அப்போது அடிப்படை பணியாளர்களாகத் தொடங்கி, பின்னர் அதே நிறுவனங்களில் உயர்ந்த நிலைகளுக்கு முன்னேறிய பலர் வாழ்வில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வகையில், சுவிற்சர்லாந்தின் ஆர்காவ் பிராந்தியத்தில் உள்ள போட்ரால் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற “பேறென் (“Gasthaus zum Bären”)” விருந்தகம் 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு புதிய உரிமையாளராக ஈழத்தமிழர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கிறது.
பல தலைமுறைகளாக கிராம மக்களும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்தும் வந்த விருந்தினர்களும் அன்புடன் வரவேற்கப்பட்ட இவ்விருந்தகத்தை, திரு மற்றும் திருமதி ஹான்ஸ் மற்றும் கெட்டி கிஸ்ட்லர் தம்பதியினர் அர்ப்பணிப்புடன் நடத்தி வந்தனர்.

எட்டாவது தலைமுறை உணவக நிர்வாகிகளாக இருந்த இத்தம்பதியினர், இதயப்பூர்வ அக்கறை, தொழில்முறை திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் “பேறென்” விருந்தகத்தை வளர்த்துள்ளனர்.
தமக்கு அடுத்ததாக இப்பாரம்பரிய உணவகத்தை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பிய அவர்கள், விருந்தகத்தின் எதிர்காலம் நம்பிக்கையுடன் தொடரும் என்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தாலும், மரபு தொடர்வதில் தங்களுக்கு உளமகிழ்ச்சி இருப்பதாக அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், 2011 ஆம் ஆண்டிலிருந்து “பேறென்” விருந்தகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வந்த ஈழத்தமிழர் திரு கணேசதாஸ் தயாளகுரு (குரு) அவர்கள், தனது மனைவி சசிகலாவுடன் இணைந்து புதிய உரிமையாளராக முழுப் பொறுப்பையும் ஏற்கவுள்ளார்.
திரு குரு விருந்தினர்களிடையே ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். அவர்களின் தலைமையில் சுவிற்சர்லாந்தின் உணவுப் பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைக்கும் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
விருந்தகத்தின் அடையாளமாக விளங்கிய பணியாளர்கள் தொடர்ந்தும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகளாக சேவை செய்து வரும் ரெனாட்டா ரைனர் மற்றும் 2025 நவம்பரில் சமையல்காரராக இணைந்த சாண்ட்ரா பிங்கெர்ட் ஆகியோர் புதிய நிர்வாகத்துடனும் தொடர்வதால், தரமும் பழக்கமான சூழலும் நிலைத்திருக்கும்.
“பேறென்” விருந்தகம் ஒரு உணவகம் மட்டுமல்ல; அது பலருக்கு இரண்டாவது இல்லம் போன்றது. தலைமுறைகள் சந்தித்து உரையாடிய இடம், குடும்ப விழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெற்ற மையம், நினைவுகள் உருவான தளம் என்பவற்றால் அது தனித்துவம் பெற்றுள்ளது.
புதிய நிர்வாகமும் வீடு, கிராமம், பிராந்தியம் மற்றும் நிரந்தர விருந்தினர்களுக்கு அதே மரியாதையையும் அன்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
சமையல் பாரம்பரியமும் தொடர்கிறது. பிரபலமான பாரம்பரிய உணவுகள், சிறப்பாக பாராட்டப்படும் சாலட் சாஸ் வகைகள் மற்றும் குருவின் இலங்கை சிறப்பு மெனுக்கள் தொடர்ந்து வழங்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய சுவையும் புதிய தனித்துவமும் ஒன்றிணையும்.
ஒப்படைப்பு நிகழ்வை முன்னிட்டு, 25 சித்திரை 2026 அன்று விடைபெறும் நிகழ்ச்சி நடைபெறும். 26 சித்திரை முதல் 4 ஆனி 2026 வரை மாற்றுப்பணிகள் காரணமாக விருந்தகம் மூடப்பட்டிருக்கும். மறுதிறப்பு 5 ஆனி 2026 அன்று நடைபெறும்.
மறுதிறப்பிற்குப் பிறகு “பேறென்” விருந்தகம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விருந்தகம் மூடப்பட்டிருக்கும்.
புதிய தலைமுறையுடன் பழைய பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொண்டு “பேறென்” விருந்தகம் சமூகத்தின் அன்பும் ஆதரவுமுடன் தனது பயணத்தை தொடர்ந்து முன்னேற்றுகிறது.
இதில் ஈழத்தமிழர் ஒருவர் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு முன்னேறியிருப்பது, தமிழர்களின் தொழில் முன்னேற்றத்தில் முக்கியமான படிக்கல்லாகக் கருதலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |