தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்த நபர்: சுவிட்சர்லாந்தை அதிரவைத்த சம்பவம்
சுவிட்சர்லாந்தில் ஒரு தாயும் அவரது இரு மகள்களும் கொலை செய்யப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர், தான்தான் அவர்களைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை
கடந்த செவ்வாய்க்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 19ஆம் திகதி மாலை, சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்திலுள்ள Corcelles என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து பொலிசாருக்கு ஒரு அழைப்பு வந்தது.
இரவு 11.30 மணிக்கு அந்த வீட்டுக்கு விரைந்த பொலிசார், பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைய, தாங்கள் கண்ட காட்சி தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆம், அந்த வீட்டுக்குள், 47 வயதுடைய ஒரு பெண்ணும், முறையே 10 மற்றும் 3 வயதுடைய அவரது இரண்டு மகள்களும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்கள்.
அங்கிருந்த 52 வயது நபர் ஒருவர் பொலிசாரைக் கண்டதும் கத்தியுடன் அவர்களை நோக்கிப் பாய, பொலிசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே பொலிசாரில் ஒருவர் அந்த நபரின் இடுப்புக்குக் கீழே மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
காயமடைந்த அவரைக் கைது செய்த பொலிசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அவர் அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
பல ஆண்டுகளாகவே தம்பதியருக்குள் கருத்துவேறுபாடுகள் நிலவிய நிலையில், ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், சட்டப்படி அந்த நபர் தன் மனைவியைப் பிரிந்து Le Locle என்னுமிடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.
இந்நிலையில், ஆகத்து மாதம் 19ஆம் திகதி தன் முன்னாள் மனைவி வீட்டுக்குச் சென்ற அந்த நபர், அந்தப் பெண்ணையும் தம்பதியரின் இரண்டு மகள்களையும் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
சிகிச்சைக்குப் பிறகு அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், எதற்காக தன் முன்னாள் மனைவியையும் மகள்களையும் கொன்றார் என்பதை அவராலேயே சொல்லமுடியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள். வழக்கு விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |