மருந்துகளுக்கு கட்டுப்படாத நோய்க்கிருமிகள்... சுவிஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை
Multidrug resistant bacteria pose a major challenge to public health, warns Federal Office of Public Health: மருந்துகளுக்கு கட்டுப்படாத நோய்க்கிருமிகள் மக்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக சுவிஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை.
பாக்டீரியாக்களில் இரண்டு வகை உள்ளன. ஒன்று, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, மற்றொன்று, உடல் நலனை பாதுகாக்கும் பாக்டீரியா.
தற்போது மருத்துவ உலகம் இன்னொரு வகை பாக்டீரியாவைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியா
அப்படி மருத்துவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த பாக்டீரியா, Multidrug-resistant bacteria, அதாவது, பல ஆன்டிபயாட்டிக்குகள் கொடுத்தாலும் அதை எதிர்த்து நிற்கும் பாக்டீரியா.

எளிமையாக கூறினால், மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியா. ஆக, இந்த வகை பாக்டீரியாக்களை எளிதில் அளிக்கமுடியாது என்பதால், இவ்வகை பாக்டீரியாவால் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவரை குணமாக்குவது கடினம்.
மோசமான விடயம் என்னவென்றால், ஏதோ ஒரு திடீர் பிரச்சினைக்காக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் அனுமதிக்கப்படும் நிலையில், அவரால் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கமுடியாது என்பதால், அவர் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்ற கத்தீற்றர் என்னும் குழாயை பொருத்துவார்கள்.
இந்த கத்தீற்றர் போன்ற குழாய்கள் மூலம் இந்த மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியா அந்த நபரின் உடலுக்குள் நுழைந்துவிட்டால், ஏதோ ஒரு பிரச்சினைக்காக வந்த நபர், சம்பந்தமே இல்லாத புதிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.
எதிர்காலத்தில் ஒருகட்டத்தில், புற்றுநோயால் உயிரிழப்பவர்களைவிட, இந்த மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள் சிலர்.
சுவிஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை
இந்நிலையில், சமீபத்தில் லோசான் பல்கலை மருத்துவமனைக்கு வருகை புரிந்த ஃபெடரல் சுகாதார அலுவலக இயக்குநரான Anne Lévy, இந்த மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியா அதிகரித்து வருவதாகவும், அவை பொதுமக்கள் நலனுக்கு பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தில் சுமார் 60,000 பேர் மருத்துவமனைகளுக்கு வரும்போது தொற்றுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ள அவர், சிலருக்கு இந்த மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியா தொற்று ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாவை கட்டுப்படுத்த மருத்துவமனைகள் முயற்சிகளை அதிகரிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.