இரண்டு பேரை திடீரென கத்தியால் குத்திய சுவிஸ் இளம்பெண் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு பதிவு
சுவிஸ் பெண் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 24ஆம் திகதி, திடீரென இரண்டு பேரைக் கத்தியால் குத்திய வழக்கில், அவர் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள Lugano நகரில், 29 வயது இளம்பெண் ஒருவர் Manor பல்பொருள் அங்காடியின் அருகில் திடீரென இரண்டு பேரைக் கத்தியால் குத்தினார்.
அவர்களில் ஒருவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட, கத்தியால் குத்தப்பட்ட இரண்டாவது நபர் பொதுமக்கள் சிலருடைய உதவியுடன் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தார். பொலிசார் வரும் வரை அவர்கள் அந்தப் பெண்ணை பிடித்துவைத்திருந்திருக்கிறார்கள்.
அன்று கைது செய்யப்பட்ட அந்தப் பெண் காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு மற்றும் தீவிரவாதச் சட்டத்தை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தக் குற்றச்சாட்டில், அந்த இளம்பெண் ஐ எஸ் அமைப்பு சார்பில் தீவிரவாத நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாகவும், சுயவிருப்பத்துடன் இருவரை கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், யாரோ இரண்டு பேரை தேர்வு செய்து கொடூரமாக அவர்களைக் கொல்லும் நோக்கத்துடன் கத்தியால் தாக்கியதால், அவர் ஐ எஸ் அமைப்பின் சார்பில் மக்களிடையே திகிலை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக ஊடகங்களில் செய்திகள் வரச் செய்ததன் மூலம் ஐ எஸ் கொள்கைகளை பரப்பியதாகவும் அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் அந்த இளம்பெண் தான் சமூக ஊடகம் வாயிலாக சந்தித்த சிரியாவிலுள்ள ஒரு தீவிரவாதியை சந்திப்பதற்காக சிரியா செல்ல முயன்றதும், எல்லையில் அவரைத் தடுத்து நிறுத்திய துருக்கி அதிகாரிகள் அவரை சுவிட்சர்லாந்துக்கே திருப்பி அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த இளம்பெண் மீது சட்ட விரோத பாலியல் தொழில் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை.
அவர் மீதான வழக்கு Ticino மாகாணத்திலுள்ள Bellinzona நகரில் அமைந்துள்ள பெடரல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.