சுவிஸ் இளம்பெண் அமெரிக்காவில் கைது: பின்னணி
A 23 year old Swiss woman has been arrested at Dallas Airport: சுவிஸ் நாட்டவரான இளம்பெண்ணொருவர் அமெரிக்காவின் Dallas விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் குடிமகளான 23 வயதுடைய பெண்ணொருவர், அமெரிக்காவின் Dallas விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதன் பின்னணி
சூரிக்கைச் சேர்ந்த அந்தப் பெண், 2023ஆம் ஆண்டு, ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

2025ஆம் ஆண்டு, அவருக்கு அமெரிக்கக் குடிமகன் ஒருவருடன் திருமணமாகியுள்ளது. திருமணத்துக்குப் பின், அவர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையில், அவரது தற்காலிக குடியிருப்பு அனுமதி சமீபத்தில் காலாவதியாகியுள்ளது.
இந்நிலையில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை, சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டுள்ளார் அந்தப் பெண்.
அப்போது, Dallas விமான நிலையத்தில் வைத்து, அமெரிக்க புலம்பெயர்தல் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
அடுத்து என்ன?
தற்போது அவர், தடுப்புக் காவல் மையம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக Watson என்னும் சுவிஸ் ஒன்லைன் ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தை சுவிஸ் ஃபெடரல் வெளி விவகாரங்கள் துறையும் உறுதி செய்துள்ளது.
விடயம் என்னவென்றால், அமெரிக்க சட்டப்படி, சுவிஸ் ஃபெடரல் வெளி விவகாரங்கள் துறையால் அந்தப் பெண்ணுக்கு விடுதலை பெற்றுத்தரவோ, சட்ட நடவடிக்கைகளில் தலையிடவோ தங்களால் இயலாது என SWI swissinfo.ch என்னும் சுவிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இனி அந்தப் பெண் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டியிருக்கும் என்றும், அதற்குப் பின்பு அமெரிக்காவுக்குள் நுழைய அவருக்கு பல ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்றும் சட்டத்தரணிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.