சுவிஸ் இளம் பெண்களில் திடீரென்று காணப்படும் அதிக உதிரப்போக்கு: தடுப்பூசி காரணமா?
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிறகு பல இளம் பெண்கள் திடீரென தங்கள் மாதவிடாயில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அடையாளம் கண்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி தன் நாட்டு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி அளித்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இடம் பிடித்துள்ளது.
தடுப்பூசியால் இரத்தக்கட்டிகள் மற்றும் இதய வீக்கம் உள்ளிட்ட பக்கவிளைவுகள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுவிஸ் இளம் பெண்களில் மாதவிடாய் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பல பெண்கள் தங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியும் வருகின்றனர். மாடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட ஒன்றரை வாரத்தில் பெண் ஒருவருக்கு குறிப்பிட்ட நாளுக்கும் ஒரு நாள் முன்னரே மாதவிடாய் கண்டுள்ளது.
இதே அனுபவத்தை நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இன்னொருவர், தமது மாதவிடாயின் கடைசி நாளில் மாடர்னா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும், ஆனால் சரியாக 9 நாட்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் மாதவிடாய் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி பல இளம் பெண்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் அதிக உதிரப்போக்கால் அவதிக்குள்ளானதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, mRNA அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் அறிவியல் ரீதியாக இது இன்னும் விசாரிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
பலருக்கும் மாடர்னா தடுப்பூசியால் மாதவிடாய் மாற்றங்களும் அதிக உதிரப்போக்கும் கண்டுள்ளது. சிலர் தொடர்ந்து 6 நாட்கள் அதிக உதிரப்போக்கால் அவதிப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, மாதவிடாய் நாட்களுக்கு பிறகு, திடீரென்று உதிரப்போக்கு ஏற்பட்டதாகவும் பல பெண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.