200 அகதிகளை உடனடியாக ஏற்க முடிவு செய்த சுவிஸ் அரசாங்கம்
ஆப்கானிஸ்தானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய 40 உள்ளூர் ஊழியர்கள் உட்பட 200 பேர்களை உடனடியாக ஏற்க சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கிய பல மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றிவரும் தாலிபான் தீவிரவாத அமைப்பு, தலைநகர் காபூலுக்கு அருகாமையில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் காபூல் நகரமும் தாலிபான் வசம் ஆகலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதனால் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
காபூல் நகரில் அமைந்துள்ள பல நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டு, அங்குள்ள ஊழியர்களை ராணுவத்தின் உதவியுடன் மீட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், காபூல் நகரில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றி வந்த 40 உள்ளூர் ஊழியர்களை மனிதாபிமான அடிப்படையில் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் நெருங்கிய உறவினர்கள் குழந்தைகள் உட்பட 200 பேர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்க சுவிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் சுவிஸ் ஊழியர்களுடன் அந்த 200 பேர்களும் உடனடியாக உரிய முறைப்படி சுவிட்சர்லாந்துக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புகலிடக்கோரிக்கையாளர்களாக ஆப்கான் மக்கள் 2,800 பேர்கள் தற்போது நாட்டில் உள்ளதாகவும், அதில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 130 பேர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழலில் இருப்பதாகவும்,
அவர்கள் தற்போதைய ஆப்கான் நிலையை கருத்தில் கொண்டு, வெளியேற்றப்படமாட்டார்கள் என சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே, அதிகாரப் பகிர்வு தொடர்பில் தாலிபான்களுடன் ஆப்கான் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.