சுவிஸ் தனிமைப்படுத்தல் பட்டியலில் மேலும் 5 நாடுகள் சேர்ப்பு
பிரித்தானியா உட்பட 5 நாடுகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதன் தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
போட்ஸாவானாவில் முதன்முதலில் கண்டறியறியப்பட்டு, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவிவரும் புதிய வகை Covid-19 வைரஸான Omicron, தற்போது பல உலக நாடுகளில் பரவ தொடங்கிவிட்டது.
பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த புதிய வைரஸ் பரவலை தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், சுவிட்சர்லாந்து அரசு, முதலில் தென்னாப்பிரிக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நேரடி விமானங்கள் நாட்டிற்குள் வர தடைசெய்தது.
அதனைத் தொடர்ந்து, ஹொங்ஹொங், இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
மேல் குறிப்பிட்ட இந்த நாடுகளில் இருந்து யாரேனும் நுழைய வேண்டும் என்றால், அவர்கள் சுவிஸ் குடிமக்களாக இருக்கவேண்டும் அல்லது சுவிட்சர்லாந்தில் அல்லது ஷெங்கன் பகுதியில் குடியிருப்பு அனுமதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இப்போது, Omicron வகை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 5 நாடுகளை, சுவிட்சர்லாந்தின் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, நெதர்லாந்து, செக் குடியரசு, எகிப்து மற்றும் மலாவி ஆகிய 5 நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு பயணக் கட்டுப்பாடு விதித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
Photo: REUTERS/Arnd Wiegmann
இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சுவிட்சர்லாந்துக்கு வந்தால், எதிர்மறையான COVID-19 சோதனை காண்பிக்கப்படவேண்டும் மற்றும் அடுத்த பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்தின் கூட்டாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள், அங்கிருந்து வரும் சுவிஸ் குடிமக்கள் மற்றும் குடியிருப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமா என்பது குறிப்பிடப்படவில்லை.