'உடனே வெளியேறுங்கள்' சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு எச்சரிக்கை!
எத்தியோப்பியா நாட்டை விட்டு உடனே வெளியேறுமாறு சுவிட்சர்லாந்து அரசு அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், எத்தியோப்பியாவை விட்டு வெளியேறுமாறு சுவிட்சர்லாந்து தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது என்று அதன் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய வெளியுறவுத்துறை (FDFA), சுவிஸ் குடிமக்கள் யாரும் எந்த காரணத்திற்காகவும் எத்தியோப்பியாவிற்கு பயணம் செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறது.
மேலும், எத்தியோப்பியாவில் உள்ள சுவிஸ் நாட்டவர்கள் தங்கள் சொந்த வழியில் நாட்டை விட்டு வெளியேறவும் பரிந்துரைக்கப்படுகிறது.
கிடைக்கக்கூடிய வணிக விமானங்களைப் பயன்படுத்தி எத்தியோப்பியாவை விட்டு வெளியேறுமாறு FDFA கூறியது.
எத்தியோப்பியாவில் 230 சுவிஸ் குடிமக்கள் அடிஸ் அபாபாவில் உள்ள நாட்டின் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் நாட்டில் வசிக்கின்றனர். நவம்பர் தொடக்கத்தில் இருந்து சுமார் 20 பேர் வெளியேறியுள்ளனர்.
முன்னதாக, எத்தியோப்பியாவிலிருந்து கிடைக்கக்கூடிய முதல் வணிக விமானங்களில் வெளியேறுமாறு ஜேர்மனி தனது நாட்டினரை செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவும் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளது.
பாதுகாப்பு நிலைமை காரணமாக எத்தியோப்பியாவிலிருந்து சர்வதேச ஊழியர்களின் குடும்பங்களை ஐக்கிய நாடுகள் சபை தற்காலிகமாக இடமாற்றம் செய்வதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செவ்வாயன்று கூறினார்.
மேலும், ஐ.நா பணியாளர்கள் மட்டும் அந்நாட்டில் இருப்பார்கள் என்று கூறியுள்ளது.