அவர்களும் மனிதர்கள் தான்... சுவிட்சர்லாந்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்
சுற்றுலாப்பயணிகளை இருகரம் நீட்டி வரவேற்கும் நாடு சுவிட்சர்லாந்து...
தொலைவிலிருந்து பார்க்க, அழகோ அழகு, ஆனால், புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும் அந்நாடு நடத்தும் விதமோ, படுமோசம்!
இதைச் சொல்வது, சர்வதேச மனித உரிமைகள் ஆதரவு அமைப்பான Amnesty International.
மனிதர்களாகவாவது நடத்துங்கள்
சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் மற்றும் மற்றும் புகலிடக்கோரிக்கை மையங்களில் அடைக்கப்பட்டுள்ளோர் மீது, (குழந்தைகள் உட்பட) பாதுகாவலர்கள் நடத்தும் அராஜகங்கள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது Amnesty International அமைப்பு,
அதன் தலைப்பு: ’புகலிடக்கோரிக்கையாளர்களை மனிதர்களாகவாவது நடத்துங்கள்’ என்பதாகும்.
அந்த அளவுக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கை மையங்களின் பாதுகாவலர்கள் புகலிடக்கோரிகையாளர்களை மோசமாக நடத்துகிறார்களாம்.
முதன்முறையாக நடவடிக்கை
இப்படி Amnesty International முதல் பல்வேறு அமைப்புகள் சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீதான அராஜகங்கள் குறித்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் நிலையில், முதன்முறையாக சுவிஸ் அரசு ஒரு குறிப்பிட்ட புகலிடக்கோரிக்கை மையத்தில் அராஜக செயல்களில் ஈடுபட்ட பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்திலுள்ள Boudry என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றில், புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் சட்டையில்லாமல் உறையவைக்கும் குளிரில் வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறார்.
குளிரில் உறைந்த அவரை அறைக்குள் கொண்டு சென்ற பிறகும், 40 நிமிடங்கள் கழித்தே அங்குள்ள ஊழியர்கள் அவருக்கு ஒரு போர்வை கொடுத்திருக்கிறார்கள், மருத்துவ உதவியை அழைத்திருக்கிறார்கள்.
அவர் ஹைப்போதெர்மியா என்னும் அதீத குளிரால் பாதிக்கப்படும் பிரச்சினை மற்றும் ஹைப்போகிளைசீமியா என்னும் இரத்தத்தில் சர்க்கரை குறைவு பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, அவரை அந்த நிலைக்கு ஆளாக்கிய புகலிடக்கோரிக்கை மைய பாதுகாவலர்கள் நான்கு பேர் மீது, தாக்குதல் மற்றும் உயிருக்கும் உடல் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்படி ஒரு நடவடிக்கை சுவிஸ் அரசால் எடுக்கப்படுவது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.