சுவிட்சர்லாந்தில் அரசு உதவியை தவிர்க்கும் வெளிநாட்டவர்கள்: பின்னணியிலிருக்கும் காரணம்
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள், அரசு வழங்கும் நலத்திட்டங்களை தவிர்ப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
2019இல் உருவாக்கப்பட்ட ஒரு சட்டம்தான் இதன் பின்னணியில் உள்ளது. அதாவது, சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டவர் குறித்த பெடரல் சட்டத்தின் 63ஆவது பிரிவு, வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கான உரிமைகளை பறிக்கும் பல கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அபாயம் விளைவிப்போருடன், நீண்ட காலமாக அரசின் நலத்திட்டங்களை நம்பி வாழ்வோரும் சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கான உரிமையை இழக்க நேரிடலாம்.
2019இல் இந்த புதிய சட்டம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து சுமார் 4,000 பேர் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமையை இழந்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே அரசின் நலத்திட்டங்களை நம்பி வாழ்ந்ததால் வாழிட உரிமையை இழந்தவர்கள் அல்ல என்றாலும், இதனால் வெளிநாட்டவர்களிடையே ஒரு அச்சம் உருவாகியுள்ளது. ஆகவே, அவர்கள் அரசின் நலத்திட்டங்கள் கோரி விண்ணப்பிப்பதை தவிர்க்கிறார்கள்.
கொரோனா பரவலின்போது, புலம்பெயர்தல் மாகாணச் செயலகம், வாழிட உரிமம் வைத்துள்ளவர்களுக்கு 2019 சட்டப்பிரிவிலிருந்து விலக்களித்தது. ஆனாலும் அச்சம் காரணமாக மக்கள் அரசின் நலத்திட்டங்கள் கோரி விண்ணப்பிக்கவில்லையாம்.