பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்து செல்லும் பயணிகள் கவனத்திற்கு...
கொரோனாவின் தாக்கம் சற்றே அடங்கி, உலகம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் என்று நிமிர்ந்து உட்காருவதற்குள், அடுத்த அடியாக Omicron என்னும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஒன்று தலையெடுக்கத் துவங்கியுள்ளது.
இதனால், குளிர்கால சுற்றுலா கொஞ்சம் வருவாய்க்கு வழிவகுக்கும் என்று பார்த்தால், நெகிழ்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கிப் பிடிக்கவேண்டிய ஒரு சூழ்நிலை உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல...
Omicron தொற்று பரவல் காரணமாக சுவிஸ் பயண விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதை அறிவிப்பதிலும் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதலில், பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தடை செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.
தற்போது, அது தவறான தகவல், பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா, செக் குடியரசு, நெதர்லாந்து, எகிப்து மற்றும் Malawi ஆகிய நாடுகள், சுவிட்சர்லாந்தின், Omicron தொற்று பரவல் காணப்படுவதால் கவனம் செலுத்தவேண்டிய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆகவே, பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும். அத்துடன், அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, கொரோனாவிலிருந்து விடுபட்டிருந்தாலும் சரி, 10 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அவர்கள் தங்கள் பரிசோதனை முடிவு தொடர்பான விடயங்களை மாகாண அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதுடன், சுவிட்சர்லாந்துக்கு வந்து 4 முதல் 7 நாட்களுக்குள் மீண்டும் ஒருமுறை பிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
அந்த இரண்டாவது கொரோனா பரிசோதனையின் முடிவுகளையும் அவர்கள் மாகாண அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.