புலம்பெயர்ந்தோரிடம் அதிக வாடகை வசூலிக்கும் சுவிட்சர்லாந்து: வெளியாகியுள்ள ஆதாரங்கள்...
தங்கள் தாய்நாட்டில் கிடைப்பதைவிட, சற்று அதிக வருவாயை எதிர்பார்த்து வெளிநாடுகளில் பணி செய்ய வருகிறார்கள் புலம்பெயர்ந்தோர். அதுபோக சொந்த நாட்டில் பிரச்சினைகள் உட்பட, பின்னணியில் பல்வேறு காரணங்கள்...
வெளிநாடுகளில் காட்டப்படும் பாரபட்சம்
ஆனால், அவர்களுக்கு பல்வேறு விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
இந்த பிரச்சினை பல நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது. தகுதியும் அனுபவமும் இருந்தாலும் தகுதிக்கு குறைவான பணியும் ஊதியமும் வழங்கப்படுதல், புலம்பெயர்ந்த பின்னணிகொண்டவர்கள் என்றாலே வேலைக்கான நேர்காணலுக்கு அழைக்க தயக்கம் என பல வகைகளில் பாரபட்சம் காட்டப்படுவதை சகித்துக்கொண்டுதான் புலம்பெயர்ந்தோர் பலர் வேலை செய்கிறார்கள்.
சுற்றுலாவுக்கு வந்தால் இருகரம் நீட்டி வரவேற்பதும், வேலைக்கு வந்தால், ஒதுங்கி நில், என் மக்களுக்குப் போகத்தான் உனக்கு வேலை என சொல்வதுமாக புலம்பெயர்ந்தோர் மீது பாரபட்சம் காட்டும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் விதிவிலக்கல்ல என்பதை, சமீப காலமாக வெளியாகிவரும் செய்திகளிலிருந்து நன்கு அறிந்துகொள்ளலாம்.
அதிக வாடகை செலுத்தும் வெளிநாட்டவர்கள்
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களிடம், வீட்டு உரிமையாளர்கள் பலர் அதிக வாடகை வசூலிப்பது குறித்த ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், 100 சதுர அடி அளவுள்ள வீட்டில் வாழும் ஒரு சுவிஸ் தம்பதி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 1,550 சுவிஸ் ஃப்ராங்குகள் வீட்டு வாடகை செலுத்துவதாகவும், அதே நேரத்தில், அதே அளவுள்ள வீட்டுக்கு, வெளிநாட்டு தம்பதியர், சராசரியாக 190 சுவிஸ் ஃப்ராங்குகள் கூடுதலாக வாடகை செலுத்துவதாகவும் புள்ளிவிவரங்களை ஆதாரமாக வெளியிட்டுள்ளது.
Photo by Patrick Perkins on Unsplash
பிரச்சினை என்னவென்றால், வெளிநாட்டவர்களில் ஏழ்மையிலிருப்போர் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த நிலைதான் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரான Mustafa Atici.
இன்னொரு அநியாயமான விடயமும் காணப்படுகிறது. சுவிஸ் மக்கள் வாழும் வீடுகளைவிட வெளிநாட்டவர்கள் வாழும் வீடுகளின் அளவு சிறியதாக காணப்படுகிறது.
சுவிஸ் நாட்டவர்களைவிட, எட்டு சதுர மீற்றர் பரப்பளவு குறைவான, சிறிய வீடுகளில் வாழ்கிறார்கள் வெளிநாட்டவர்கள்.
கவலையை ஏற்படுத்தும் அடுத்த விடயம் என்னவென்றால், பொதுவாகவே, புலம்பெயர்ந்தோருக்கு வீடு கிடைப்பது கடினமாக உள்ளது என்பதாகும்.
இன்னொரு விடயத்திலும் பாரபட்சம்
வீடு வாடகை நிலைமை இப்படி என்றால், வேலையும் அப்படித்தான். சுவிஸ் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்று, சராசரியாக சுவிஸ் நாட்டவர்களைவிட 6.5 சதவிகிதம் அளவுக்கு குறைவாகவே வெளிநாட்டவர்கள் சுவிஸ் நாட்டு வேலை வழங்குவோரால் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள் என்கிறது.
Atici முதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பாரபட்சத்துக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார்கள். இப்படி பாரபட்சம் காட்டப்படும் வெளிநாட்டவர்கள், தங்கள் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதை எளிதாக்க பெடரல் கவுன்சில் வழிவகை செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்துவருகிறார் Atici.