வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம்.
அப்படியிருக்கும்போது, சுவிஸ் பாஸ்போர்ட் பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை!
அப்படி ஒர் பயங்கர விடயம் நடக்க வாய்ப்புள்ளதா?
அந்தக் கேள்விக்கான பதில், ஆம் மற்றும் இல்லை!
அதாவது, நீங்கள் ஒரு சுவிஸ் குடிமகனாக இருக்கும் பட்சத்தில், அதவாது இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இல்லாமல், வெறும் சுவிஸ் குடிமகனாக மட்டுமே இருக்கும் பட்சத்தில், என்ன நடந்தாலும் உங்கள் சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாது.
ஆனால், நீங்கள் சுவிஸ் மற்றும் மற்றொரு நாட்டின் குடியுரிமை கொண்டவராக, அதாவது இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இருக்கும் பட்சத்தில், பெரிய குற்றச்செயல்கள் எதிலாவது நீங்கள் ஈடுபட்டால், உங்கள் சுவிஸ் சுவிஸ் பாஸ்போர்ட்டை நீங்கள் இழக்க நேரிடும்!
அதுபோக, வேறு சில சூழல்களிலும் நீங்கள் உங்கள் சுவிஸ் பாஸ்போட்டை இழக்க நேரிடலாம்.
1. குடியுரிமை பெறும்போது (naturalisation) தவறான தகவல்களை அளித்தல் வெளிநாட்டவர் ஒருவர் குடியுரிமை பெறும் நடைமுறையின்போது, தவறான தகவலை அளித்தாலோ, அல்லது ஒரு முக்கியமான உண்மையை மறைத்தாலோ அவர் தனது குடியுரிமையை இழக்கும் அபாயம் உள்ளது.
2. தானாகவே குடியுரிமையை இழத்தல் சுவிஸ் பெற்றோருக்கு வெளிநாடு ஒன்றில் பிறந்த ஒரு குழந்தைக்கு வேறொரு நாட்டின் குடியுரிமையும் இருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்தை வளர்ந்து அதற்கு 25 வயதாகும்போது, (அந்த நபர் சுவிஸ் அதிகாரிகளிடம் பதிவு செய்திருந்தாலோ அல்லது தான் தனது சுவிஸ் குடியுரிமையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தாலோ அன்றி) அந்த நபர் தானாகவே தன் சுவிஸ் குடியுரிமையை இழந்துவிடுவார்.
அப்படி இழந்த குடியுரிமையை மீண்டும் பெற முடியுமா?
சில சூழ்நிலைகளில் அது சாத்தியமே. ஆனால், அது எளிதோ விரைவாக நடக்கும் விடயமோ அல்ல.
நீங்கள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக ஒன்றிணைந்து வாழ்ந்துவந்தால்,
நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், சுவிட்சர்லாந்துடன் உங்களுக்கு நெருக்கமான பிணைப்பு இருந்தால்,
பொது பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை சரியாக கடைப்பிடித்தால்,
பெடரல் அரசியல் அமைப்பின் கொள்கைகளுக்கு உரிய மதிப்பளித்தால்
மற்றும்
சுவிட்சர்லாந்தில் உள் மற்றும் வெளி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லையென்றால், நீங்கள் இழந்த பாஸ்போர்ட்டை மீண்டும் பெற இயலும்.